Saturday, June 25, 2011

நான் நாத்திகன் ஏன்??

நான் என்னை நாத்திகன் என்று அழைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் என்கிறீர்களா??

பிறப்பால் நான் ஒரு ஹிந்து. இன்றும், எவ்வாறு பிறக்கும் போதே குழந்தைகளுக்கு மதம் திணிக்கப்படுகிறதோ, அதே போல் தான் எனக்கும் ஹிந்துக் கடவுள்களையும் புராண இதிகாசங்களையும் நம்பும் படி கூறி வளர்த்தனர். அதனால் சிறு வயதில் நானும் கடவுள் நம்பிக்கை உடையவனாகத்தான் இருந்தேன். ராமாயணம், மஹாபாரதக் கதைகளை கேட்டு வளர்ந்தவன் தான் நானும். எனது ஊரில் பத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன(உள்ளது). அதனால் அகிலத்தை காக்கின்ற கடவுள் நம்மையும் காப்பார் என்ற நம்பிக்கையில் தான் நானும் வளர்ந்தேன்.

முதன் முதலில் என் நம்பிக்கையில் விரிசல் ஏற்படுத்தியது சாதிய முறை தான். இன்றும் கிராமங்களில் நிலவி வரும் சாதிய முறை எனது ஊரிலும் அதன் ஆழமான வேரினை பரப்பி இருந்தது. எங்கள் கிராமத்தில் உயர்சாதியினர் என்று கூறிக் கொள்ளும் பிரிவினில் நான் பிறந்திருந்ததனால் எனக்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

எனது உறவினர்களை யாரையாவது பெயர் சொல்லியோ மரியாதை இல்லாமல் அழைத்தாலோ திட்டு வாங்கிய நான், எங்கள் ஊரிலுள்ள கீழ்சாதியினரை (அவர்கள் என்னை விட வயதில் மூத்தவர்களாக இருப்பினும்) பெயர் சொல்லி அழைக்குமாறு எனது உறவினர்களே என்னை அறிவுறுத்தியது, சாதிய முறை பற்றி என்னை சிந்திக்க வைத்தது. அவர்கள் என்னை விட வ்யதில் மூத்தவர்களாக இருந்தாலும் என்னை மரியாதையுடன் அழைப்பது, அவர்களை எங்களது வீட்டிற்குள் அனுமதிக்காதது, கோயில்களில் வழிபாடு செய்யத் தடை விதித்திருந்தது, அவர்கள் பயன்படுத்த மட்டும் தனி பாத்திரங்கள் (அதனையும் அவர்களே கொண்டுவருவது) ஆகிய பலவற்றை அவ்வயதில் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

இத்தகைய சூழலில், விசேஷ நாட்களில் பலர் எங்கள் ஊரில் இருந்து பழனி, திருச்செந்தூர், இராமேஸ்வரம் ஆகிய (புண்ணிய!) தளங்களுக்கு செல்வர். இத்தனைக்கும் பத்துக் கோயில்கள் உடைய எங்கள் ஊரிலேயே வழிபாடு நிகழ்த்தினால் என்ன என்று கேட்டதற்கு "இது சின்னக் கடவுள் (சக்தி குறைந்தது) , நான் (சக்தி நிறைந்த) பெரிய கடவுளை பார்க்கப் போகிறேன்" என்பதே பதிலாய் வந்தது. மனிதர்களிலே உயர்வு தாழ்வு கற்பித்தவர்கள் கடவுளிலும் உயர்வு தாழ்வு கற்பித்தது மேலும் எனக்கு குழப்பத்தையே ஏற்படுத்தியது.

மேலும் அவ்வயதில் கோயிலுக்கு சென்றால் கடவுளிடம், "அது கேட்டாயா, இது கேட்டாயா" , நான் "இதனைக் கேட்டேன், அதனைக் கேட்டேன்" என்று சிலர் கேட்பர். அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அனைத்தும் தெரிந்த, அனைத்தையும் ஆளுகிற கடவுளுக்கு எனக்கு என்ன வேண்டும் என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா??


நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது இவ்வெண்ணங்கள் தீவிரமாகின. இச்சமூகம் எவ்வாறு இயங்குகிறது? நான் ஏன் பிறந்தேன்? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? போன்ற பல கேள்விகள் என்னுள் உதித்தது. இதனை தெரிந்து கொள்ளும் பொருட்டு நான் விவேகானந்தரின் சிந்தனைகள், பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு, பகவத் கீதை(புரியவில்லை என்றாலும்), என் நண்பனிடம் வாங்கிய பைபிள் மற்றும் ஆன்மிக உரைகளை தேடி தேடி படித்தேன். இதன் மூலம் நன்மை-தீமை, சொர்க்கம்-நரகம், இன்பம்-துன்பம், முற்பிறவி-மறுபிறவி, கர்மா போன்றவற்றை அறிய முடிந்தது. ஆனாலும் எனக்கு முழு திருப்தி ஏற்படவில்லை.

இவ்வுலகை அனைத்தையும் படைத்தவர் கடவுள் என்றால்,  நன்மையை படைத்த அவர், ஏன் தீமையை படைத்தார்??
                                                                                                                        இன்பத்தை படைத்த அவர், ஏன் துன்பத்தை படைத்தார்??
நம்மை படைத்த அவர் ஏன் பாவங்கள் செய்ய வைத்து, மறு பிறவி ஒன்றை ஏற்படுத்தி அந்த பாவங்களை கழிக்க வேண்டும் என்றார்? அதற்கு முதல் பிறவியிலேயே நல்லவனாக படைத்து விட்டு போகலாமே??? அனைத்தும் வல்ல கடவுளினால் இதனை செய்ய முடியாதா?? போன்ற கேள்விகளுக்கு எனக்கு விடை கிட்டவில்லை.

இத்தனை சந்தேகங்கள் எழுந்தாலும், யாரிடமாவது கேட்டால் "கடவுள் மீதே சந்தேகம் கொள்கிறாயா, உனக்கு படிப்பு வராது பார்!!" என்று பயம் காட்டினர். ஆனாலும் என் வகுப்பில் நான் தான் முதல் மாணவனாக வருவேன்.

மேலும் அனைத்திற்கும் விதி, தலை எழுத்து என்று கூறி பிரச்சனையை முடிக்கும் வழக்கமே மேலோங்கி இருந்தது. ஒரு சிறு நிகழ்ச்சியினை கூறுகிறேன். எனது வீட்டிற்கு அருகில் இருப்பவர், தனது பெண்ணை பக்கத்து ஊரில் உள்ள ஒருவருக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார். அக்கணவரின் நடவடிக்கைகள் சரி இல்லாததால் அப்பெண் அடிக்கடி பிறந்த வீட்டிற்கு வந்து விடுவார். இதற்கு பரிகாரமாக ஜோசியம் பார்க்க சென்ற அவ்வீட்டாரிடம், ஜோசியர் "பெண் பிறந்த நேரம் அவ்வாறு, திருமண நாளினை தள்ளி வைத்திருந்தால் இவ்வாறு ஆகியிருக்காது" என்று சொன்னதாகவும் "என்ன பண்றது அது அவ விதி"என்றும் என் அம்மாவிடம் கூறிக் கொண்டிருந்தார். இதனைக் கேட்ட எனக்கு அக்கணவரின் செய்கைகளுக்கு இவளின் மீது பழி போட்டது எனக்கு சரியாய் படவில்லை.

அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றால், நான் ஒரு தவறு செய்கின்றேன் என்று வைத்துக் கொண்டால், அது முன்னரே தீர்மானிக்கப்பட்டதினால் செய்கிறேனா இல்லை நான் தான் வேண்டும் என்றே செய்தேனா?? எனது விதியினால் தான் செய்கிறேன் என்றானால், அதற்கு நான் எவ்வாறு பொறுப்பாளன் ஆவேன் என்று யோசித்தேன். விதியின் மேல் இருந்த நம்பிக்கை அன்றே போனது.
இத்தனை கடவுள்கள் இருந்தும் ஏன் இத்தனை பிரச்சனைகள்?? நான் பள்ளி செல்லும் வழியிலும் திரும்பும் வழியிலும் இதே சிந்தினையுடனே இருந்தேன்.

எனது தந்தை பொதுவுடைமை இயக்கத்தில் இருந்ததனால், அவருக்கு கடவுளின் மேல் அதிக நாட்டம் இருந்ததில்லை. இதனால் என்னால் சுதந்திரமாக சிந்திக்க முடிந்தது. மாற்று சிந்தனை உடையவனாக என்னை வார்த்தெடுக்க அந்த சுதந்திரம் பெரிதும் உதவி செய்தது. இந்நிலையில், திராவிடர் கழகத்தின் வெளீயிடுகள் எனக்கு கிடைக்கப் பெற்றது. அதனை படித்த போது தான் ஹிந்து மதத்தின் உண்மை முகம் தெரிந்தது.

பலர் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய பெரியார்-தான் என் வாழ்விலும் அறிவொளி ஏற்படுத்தினார். அவரின் எழுத்தினை படித்த போதுதான் என்னுள் எழுந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. எனக்கு கிடைத்த விடைகள் என்னவென்று பார்ப்போம்.

பல கேள்விகள் கேட்ட என்னை, "கேள்வி கேட்காதே, கடவுளை நம்பு" என்று சொன்னவர்கள் மத்தியில், "நான் சொல்வனவற்றை நம்பாதே, நீ சிந்தித்துப் பார், உனக்கு சரி என்று பட்டால் மட்டும் அதனை நம்பு" என்று சொன்னவர் தான் தந்தை பெரியார்.

உலகிலேயே மிகவும் தொன்மையான மற்றும் பல கோடி பேர் நம்பும் மதத்தினை நான் ஏன் வெறுக்க வேண்டும்??

இன்று பலர் ஹிந்து மதத்தினைப் பற்றி பேசும் போது "ஹிந்து மதமா, இங்கு தினமும் பூஜை செய்கிறவனும் ஹிந்து தான், பூஜை என்றால் என்னவென்றே தெரியாதவனும் ஹிந்து தான், இது போன்ற சுதந்திரமான மதம் வேறு உள்ளதா?" உண்மையிலேயே இம்மதம் சுதந்திரமானதா?? பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்று பிரித்து, இந்த சாதியா இது தான் செய்யணும், அந்த சாதியா அதுதான் செய்யணும் என்று வகுத்து, மனித உரிமைகளையே நசுக்கிய மதமா சுதந்திரமானது??
கார்ல் மார்க்ஸின் கூற்றுப்படி " அடிமைத்தனத்திலேயே பெரிய அடிமைத்தனம், தான் அடிமையாய் இருப்பதே தெரியாமல் இருப்பதுதான்" என்பார். அது போல் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு தனது சமூகத்தில் பெரும்பாலோனோரை அடிமையாய் நடத்திய மதம் வேறுண்டா??
இந்து மததர்மம் என்ன சொல்கிறது?

நீ ஏழையா, முற்பிறவியில் பாவங்கள் செய்தாய்.
நீ கீழ்சாதியா, போன பிறவியில் செய்த கர்மவினை தான் இதற்கு காரணம் என்று கூறுவது மிகப்பெரிய ஏமாற்று வித்தை.
அனைத்தினையும் துறந்து பற்றற்று கடவுளை அடைவதே நம் பிறப்பின் நோக்கம் என்பது மிகப் பெரும் பொய்யாகத் தான் எனக்கு பட்டது.

இந்தியாவில் ஆயிரமாயிரம் ரிஷிகள், முனிவர்கள், கடவுளிடமே பேசுபவர்கள், கடவுளை பார்த்தவர்கள் - இவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் இருந்தும் அதனால் நமக்கு விளைந்த பயன் என்ன?? பெரியாரின் கூற்றுப்படி "தீக்குச்சிக் கூட ஆங்கிலேயன் தான் கொண்டு வந்தான். இன்று நாம் உபயோகிக்கும் தொலைக்காட்சி, ஃபோன், மின்சாரம், கணினி, செயற்கை கோள் முதல் அனைத்தினையும் உருவாக்கியது யார்??? கடவுள் கடவுள் என்று கூறிக் கொண்டிருந்தவனாலா இது நிகழ்ந்தது???
விதி என்ற ஒன்று உள்ளதா??

விதி மற்றும் தலை எழுத்தினைப் பொருத்தவரை இரண்டே இரண்டு நிச்சயத்தன்மைகள் தான் உள்ளன.
ஒன்று, அனைத்தும் விதிப்படி, நம்மால் மாற்ற இயலாது என்றால், அங்கு கடவுளின் பின்னால் செல்லவேண்டிய தேவை இல்லை(முன்னமே எழுதப்பட்டதனை மாற்ற முடியாதே, கடவுளிடம் வேண்டினாலும்).
இல்லை இல்லை, விதியினை மதியினால் வெல்லலாம் என்றால், அங்கு கடவுளின் இருப்பிடம் கேள்விக்குள்ளாகிறது.
எப்படி பார்த்தாலும், மனித வாழ்க்கைக்கு கடவுள் தேவையில்லை என்பது புலப்படும்.

இறுதியாக பகத்சிங்கின் வரிகளுடன் இப்பதிவினை முடிக்கிறேன்:


ஒருவேளை நீங்கள் நம்புவதுபோல, அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாவற்றுக்கும் மேலான, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த இறைவன் உண்டு என்றால், இந்த பூமி அல்லது உலகத்தைப் படைத்தது யார்? அதைப் படைத்தது எதற்காக என்று தயவுசெய்து சொல்லுங்கள். துன்பங்களும் துயரங்களும், முடிவே இல்லாத எண்ணற்ற துயரச் சம்பவங்களும் நிறைந்த, உலகத்தில் உள்ள ஒரேயொரு மனிதன்கூட முழுக்கவும் திருப்தியடைய இயலாத உலகம் இது.


அதுதான் கடவுளின் சட்டம் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்; இறைவன் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவன் என்றால், அவன் அனைத்திற்கும் மேலானவனாக இருக்க முடியாது; அவனும் நம்மைப் போலவே ஒரு அடிமைதான். அவனுடைய மகிழ்ச்சிக்கான திருவிளையாடல் என்று தயவுசெய்து கூறாதீர்கள்; நீரோ மன்னன் ஒரு ரோம் நகரை எரித்தான். அவன் கொன்றது எண்ணிக்கையில் அடங்கக்கூடிய அளவு மக்களைத்தான். சில துயரச் சம்பவங்களை நிகழ்த்தினான். எல்லாம் அவனுடைய மகிழ்ச்சிக்காக. ஆனால் வரலாற்றில் அவனுடைய இடம் எது? வரலாற்று ஆய்வாளர்கள் அவனை என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்கள்? இருக்கிற வசைச் சொற்கள் அனைத்தும் அவன்மேல் பொழியப்படுகின்றன. அவன் கொடுமைக்காரன், இதயமற்றவன், வெறிபிடித்தவன் என்ற வசைச் சொற்களால் வரலாற்று நூல்களின் பக்கங்கள் எல்லாம் கறைபடிந்துள்ளன. ஒரு செங்கிஸ் கான் தன் மகிழ்ச்சிக்காக சில ஆயிரம் உயிர்களை பலி கொடுத்தான்; நாம் அவன் பெயரையே வெறுக்கிறோம். இப்படி இருக்கையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் எண்ணற்ற துன்பங்களை ஏற்படுத்தி வந்திருக்கிற, இப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற உங்களுடைய அந்த எல்லாம் வல்லானை, நிலைபேறுடைய நீரோவை எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறோம்? செங்கிஸ்கான் செய்ததை விட அதிகமாக ஒவ்வொரு கணமும் செய்கிற கொடுமைகளை ஆதரிக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள்? நரகம் என்ற பெயருக்கேற்ப எப்போதும் துன்பங்கள் நிலவுகிற இந்த உலகத்தை அவன் எதற்காகப் படைத்தான் என்று நான் கேட்கிறேன். இதெல்லாம் எப்படி நியாயமாகும்? துன்பப்படும் அப்பாவிகள் அடுத்த பிறப்பில் அதற்கான பரிசு பெறுவார்கள், தவறு செய்தவர்கள் அடுத்த பிறப்பில் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுகிறீர்களா? சரி, இந்தப் பிறப்பில் உங்கள் உடலில் காயத்தை ஏற்படுத்தியவன் அடுத்த பிறப்பில் அதன்மீது மருந்தைத் தடவுவான் என்பதை எந்த அளவுக்கு நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்? கிளேடியேட்டர் காட்சிகளை நிகழ்த்திக் காட்டியவர்களும் அதன் ஆதரவாளர்களும் பசியோடு இருக்கிற சிங்கங்களின் முன்னால் மனிதர்களை வீசினார்கள்; அந்த விலங்குகளிடமிருந்து அவர்கள் தப்பி வந்தால் அவர்களை நன்றாகக் கவனித்து ஆதரவு அளிப்போம் என்றார்கள்; இதை எந்த அளவுக்கு நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்? அதனால்தான் நான் கேட்கிறேன்: ``அனைத்துக்கும் மேலான அந்தக் கடவுள் எதற்காக உலகையும் அதில் மனிதனையும் படைத்தான்? உல்லாசத்துக்காகவா? அப்படியானால் அவனுக்கும் நீரோவுக்கும் என்ன வித்தியாசம்?''

Friday, June 24, 2011

தனியாரின் (தரமான) கல்வியை பாருங்கள்!!



இன்று சமச்சீர் கல்வியை எதிர்க்கும் அறிவுஜீவிகள், தனியார்கள் தரமான கல்வியை வழங்குகிறார்கள் என்று ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த பெரும் முயற்சிகள் எடுத்த வணணம் உள்ளனர்.அவர்களின் தரமான கல்வியின் லட்சணத்தை நீங்களே பாருங்கள்.




இரண்டாம் வகுப்பு குழந்தையின் பொது அறிவுப் புத்தகத்தில் ஒரு பக்கம். சமூகத்திற்கு மிகவும் வேண்டியவர்களா இவர்கள். அதுவும் இரண்டாம் வகுப்பு குழந்தைக்கு ஏஞ்சலினா ஜோலி முதல் ஷகீரா வரை தெரிந்து வைத்திருக்க வேண்டிய கட்டாயம் என்ன???

இப்பொழுதே அவர்களுக்கு உலக ஞானத்தை ஊட்டுகிறார்கள் போலும்.

இன்று தங்கள் பெற்றோரின் பிறந்த நாள் தெரியாத இளைய சமுதாயம், திரை நட்சத்திரங்களின் பிறந்த நாளினை கொண்டாடுகிறது. இவர்களினால் சமூகத்திற்கு என்ன பயன்?
பெட்ரோல் விலை உயர்வினை எதிர்த்து போராடினார்களா? இல்லை ஊழல் ஒழிய பாடுபட்டார்களா? இன்று கருப்பு பணம் வைத்திருப்பவர்களில், சினிமாத் துறையினர் தான் அதிகம் என்று பேசப்படுகிறது.
இவர்கள் அப்படி என்ன சாதித்து விட்டனர் என்று இவர்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

எங்கே செல்கிறோம் நாம்????

பெட்ரோல் விலை உயர்வுக்குப்பின் உள்ள அரசியல்?!!






 கடந்த ஓராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 63.45 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல் விற்கப்படுகின்றது.

இதனுடன் டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையினையும் உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினையே இது காட்டுகின்றது. சர்வதேச எண்ணெய் சந்தையின் நிலவரப்படியே விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது என்றால் ஏன் இதுவரை ஒரு முறை கூட விலை குறைக்கப்படவில்லை.
பெட்ரோலியப் பொருள்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் என்று கூறி வந்தாலும், ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சரவை கூட்டம் நடத்திய பின்னரே விலை உயர்வு அறிவிக்கப்படுகின்றது என்பதே மத்திய அரசின் உள் நோக்கத்தினை நமக்கு வெட்ட வெளிச்சமாக்கும். அதுவும் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் விலை உயர்வு அறிவிக்கப்படுகின்றது மேலும் இதனை உறுதிப்படுத்துகின்றது. இப்போது விலை உயர்வு ஏன் என்று பார்ப்போம்.

விலையை உயர்த்த சொல்லப்படும் காரணங்கள்
1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்
அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு ”இத்தன கோடி நஷ்டம்” என்பது தான்.
இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!!  இது மகாப் பொய்யாகும்!!
நாம் இதை  இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.
நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)
IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்
HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்


BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்
மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணை ‘நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.
நஷ்டம் என்று அரசு கூறுவது ‘வர வேண்டிய லாபத்தை என்று’ சில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.
அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று.
லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் ”விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.
பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு ‘அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்று’ என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு  பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.
நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா?
எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை மாறாக கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.
2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது
அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.
தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய்.
ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 மட்டும் தான்.
2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம் அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.
இது மிகப்பெரும் அநியாயமாகும்.
2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும் போதே  பெட்ரோலை லிட்டர்  54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92 டாலர் தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.
எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்
உண்மையில்  தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.
ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.

வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்
22 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.
ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..
மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.
இதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!
இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்!
மாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.
நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்) இது தெரியுமா உங்களுக்கு ?.
இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!
100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம் பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க) பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.
ஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட இரண்டு மடங்கு  வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம்.
இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.
எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின் நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கூடுதலாக வரி விதிக்க காரணம்
1. தனியார் நிறுவனங்கள்
சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும் முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.
கனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றது.
ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.
இதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.
Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின்  லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு தெரியுமா? 4923 கோடியாகும்.
இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.
தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது.
இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.
முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் நான்காவது இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.
2. வட்டி
65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான்.
இத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது.
அதன் அடிப்படையில் தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.
பெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை சுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி விதிக்கக் கூடாது.
அமெரிக்காக போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரி தான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.
18% எங்கே 65% எங்கே ?
பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக அரசும் காரணம்
மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. 
மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கூடுதலாகவே பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகின்றது.
விலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்ற நிலையிலும் வரி இல்லாமல் பெட்ரோலின் விலை வெறும் 22 ரூபாய் தான் ஆகின்றது.
இந்த 22 ரூபாயில் லாபமும் அடங்கும். வரி என்பது கூடுதலாக விதிக்கப்படுவது.
மத்திய மாநிலம் அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தாலே போதும் பெட்ரோல் விலை குறைந்துவிடும். சர்வதே சந்தையில் குரூட் ஆயிலின் விலை கூடுவதினால் பெட்ரோல் விலை பெருமளவு கூடாது.
மத்திய அரசு வரியை குறைத்தால் தான் பெட்ரோல் விலை குறையும் என்பதில்லை தமிழக அரசு 30 சதவிகிதமாக இருக்கும் தற்போதை வரியை குறைந்த பட்சம் மற்ற மாநிலங்களை போன்று குறைத்தாலே போதும். பெட்ரோல் விலை கணிசமாக குறையும்.
பொதுமக்களாகிய நாம் தான் இதற்கு ஆவண செய்ய வேண்டும்!
அநியாயம்! அநியாயம்! எங்கும் இல்லாத அநியாயம்
20 ரூபாய் பொருளுக்கு 5 அல்லது 10 ரூபாய் வரி போட்டால் சகித்துக் கொள்ளலாம் ஆனால் கிட்டதட்ட 200 சதவிகித அளவிற்கு வரி போடும் அபாயகரமான நிலையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆம் 22 ரூபாய் பெட்ரோலுக்கு 41 ரூபாய் வரி!
ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட எந்த பொருளுக்கும் இந்த அளவிற்கு வரி விதித்திருக்க மாட்டார்கள்.
சமீப காலமாக ஏற்படும் விலை வாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காணரம்!
இதை கண்டு கொள்ளாமல்அரசு மெத்தனமாகவே செயல்படுகின்றது.
இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் தற்போது உள்ள பிரதமர் பொருளாதார வல்லுணராம் அது தொடர்பாக நிறைய படித்துள்ளாராம். என்னத்த படிச்சாரோ தெரியல..
அரசியல் வாதிகள் ஆட்சியில் இருக்கும் பொது பெட்ரோலுக்கு தங்களது சொந்த பணத்தை செலவிட்டால் தானே அதன் கஷ்டம் புரியும், இவர்கள் பெட்ரோல் அலவன்ஸ் என்ற பெயரில் அரசின் பணத்தை தானே தங்களது வாகனத்திற்கு செலவிடுகின்றனர்.
எனவே பொதுமக்களின் கஷ்டம் இவர்களுக்கு எங்கு தெரியப்போகின்றது.
எனவே இந்த அநியாயத்தை பொதுமக்கள், தட்டி கேட்க தவறினால் 200 சதவிகிதம் என்ன, பெட்ரோலுக்கு 500 சதவிகிதம் கூட இவர்கள் வரி விதிப்பார்கள்.


நன்றி : www.TNTJ.net