"உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே..." - சே குவேரா
Thursday, July 28, 2011
Sunday, July 17, 2011
கல்வி முறையில் மாற்றம் தேவை
நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை. அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்தியோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள்.
ஆகையால், அவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் கூறுகின்ற ஒவ்வொன்றையும் அப்படியே மனப்பாடம் செய்து, அதையே பிறகு அவர்கள் கேட்கும்பொழுது சொல்லுவதாலும், எழுதுவதாலும் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இந்த முறையில் ஒரு மாணவன் எவ்வித உயர்ந்த பட்டத்தை அடைந்த படிப்பாளி என்று கூறப்பட்டாலும், அவனுக்குப் போதிய பொது அறிவும், உலகியலில் தகுந்த ஞானமும் அடைந்தவனாகக் கருதப்பட மாட்டான். ஆசிரியர் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும்; புத்தகத்திலுள்ளதைத்தான் மனப்பாடம் செய்து திரும்பவும் ஒப்புவிக்க வேண்டும் என்பது, நம் நாட்டுக் கல்வி முறை. இக்கல்வி முறையினால் மாணவர்களுக்கு அறிவு புகட்டப்படுவதால் அவர்கள் பிற்காலப் பழக்க வழக்கங்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும் தகுதியுடையவர்களõக ஆகமாட்டார்கள்.
ஆனால், பலர் பலவிதமாக அறிவு, ஞானம் என்பதைக் கருதுகிறார்கள். பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்கிறதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான். பொதுவாகவே மாணவன் அதற்கு இடம் கொடுக்காமல் தன்னை இன்னான் என்றுணர்ந்து "நம் பருவம் எதையும் அறிந்து கொள்ளுகின்றதும், தெரியாதவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறதுமான மாணவப் பருவம்' என்பதை உணர வேண்டும். இவ்வித எண்ணமுள்ள மாணவன்தான் பிற்காலத்தில் எதையும் அறிந்த அறிவாளியாக விளங்க முடியும்.
மேல்நாட்டு மாணவர்கள் எல்லோரும் இவ்வித எண்ணம் கொண்டவர்களாக இருப்பதாலும், அவர்களுக்கு இந்தப்படியே பயிற்சி அளிப்பதாலும்தான் அவர்கள் எதையும் ஆராயும் தன்மையுள்ளவர்களாகவும், மென்மேலும் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு இது ஏன்? எப்படி? எதற்காக? இதனால் என்ன செய்ய முடியும்? என்று இப்படிப் பலவிதமான கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொண்டே பார்த்ததால் இன்றைக்கு அவர்கள் அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குகிறார்கள். மற்றும் பல பொது விஷயங்களிலும் நம் நாட்டு மக்களைப் போல் இல்லாது, எவ்விடத்திலும் பிறருடன் நன்முறையில் பழகுகிறார்கள். ஆனால், நம் நாட்டு மாணவர்களுக்குப் பொது அறிவைப் புகட்டுவதற்கு வேண்டிய சாதனங்கள் ஒன்றும் இல்லாததாலும், நம் நாட்டுக் கல்வி முறையில் இவை கற்பிக்கப்படாததாலும் அவர்கள் வயதுவந்தவர்களானதும் பொது இடங்களிலும், உலகத்தோடும் நன்முறையில் பழகுவது கிடையாது. புகைவண்டி நிலையம் சென்றால், எவன் ஒருவன் முதலில் டிக்கட் வாங்குகிறானோ, அவன்தான் சமர்த்தன் என்று புகழப்படுகிறான். புதிய சினிமா இன்றுதான் முதலில் வெளியிடப்படுகிறது என்றால் அன்றைக்கு படத்திற்கு முதல் டிக்கட் வாங்குகிறவன் அதிபராக்கிரம புத்திசாலி என்று போற்றப்படுகிறான். ஏதாவது ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் பொய்களைக் கூறித் தப்பித்துக் கொண்டால் அவன் அறிவிற் சிறந்தவன்; அவன் கூறியது பொய்யானாலும் தன் புத்தியின் யூகத்தால், வெகு சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டான் என்றுதான் கூறுவர்.
நன்னடத்தை என்பது என்னவென்று பார்த்தால் ஒரு மனிதனிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, நீங்கள் மகிழ்ச்சியடையவும், திருப்தியடையவும் அவன் என்ன செய்யவேண்டுமோ, அதே முறையில் நீங்களும் பிறரிடம் பழகும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்டாக்கும்படியான வழியில் நடந்து கொள்வதாகும். உங்களிடம் ஒருவர் நடந்து கொள்வதிலிருந்து உங்களுக்குக் கஷ்டத்தையும், மனக்கலக்கத்தையும் அதிருப்தியையும் உண்டாக்குகிற முறைகள் எவை எவையென்று தோன்றுகிறதோ, அவையவைகளை விட்டுவிட வேண்டும். இது ஒரு சுலபமான கருத்து. இதை யாவரும் கைக்கொள்ளுவதால் நல்லறிவும், பொது அறிவும் அடைந்தவர்களாகலாம்.
(7.11.1954 அன்று திருச்சியில் ஆற்றிய சொற்பொழிவு ‘விடுதலை' 12.11.1954)
Saturday, July 16, 2011
அரசியல் எனக்கு பிடிக்கும்...!
| அன்றாட வாழ்வில் அரசியல் |
மாணவர்களுக்கு சொல்லித்தரப்பட வேண்டியது அன்றாட வாழ்வில் அறிவியல். எதற்காக என்றால் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் ஏன், எப்படி, எதனால் நடக்கின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக; அது புரிந்துவிட்டால் பிரச்சனைகளை சுலபமாகக் கையாள, எதிர்கொள்ள முடியும் என்பதற்காக. வெயிலில் விளையாடக் கூடாது என்று சொல்வதைவிட, வெயிலில் விளையாடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை அறிவி யல் பூர்வமாக விளக்கிவிட் டால் அவர்களே அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள் அல்லவா? மாணவர்களுக்குப் புரிய அறிவியல்! நமக்கு? நமக்குப் புரிய வேண்டியவை பிரச்சனைகள்! நாம் எல்லாவற்றிலும் சரியாக இருந்துவிட்டால் நமக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கிறதா? தனிப்பட்ட பிரச்சனைகளை விடுங்கள்! விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்று நம் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளின் பின்னணி? அரசியல் பேசலாமா, கூடாதா? “எனக்கு அரசியலே பிடிக்காது சார்!”, “அரசியலே சாக்கடை சார்!”. இதெல்லாம் நம்மில் பலர் பெருமையாகக் கூறிக் கொள்ளும் சொற்கள்! ஆனால், அடுத்தமாதம் நம் வீட்டு சமையற்கட்டுக்கு வரப் போகும் கேஸ் சிலிண்டரின் விலை என்ன என்பதை முடி வெடுக்கப் போவது அரசியல் தான்! நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாம் சந் திக்கும் பிரச்சனைகளின் அடிப்படை அரசியலாக இருக்கும்போது பேசாமல் இருப்பது சரியா? ஒரு மாணவன் அரசியல் பேசினால் கேட்கப்படுகிற கேள்வி “படிக்கிற காலத்தில் அரசியல் தேவையா?”, வேலைக்குப் போனபின் பேசினால் “அரசு ஊழியருக்கு அரசியல் கூடாது!” ஓய்வு பெற்றபின் பேசினால் “காலம் போன கடைசியில் அரசியல் தேவையா?”. பின் எப்போதுதான் அரசியல் பேசுவது? உண்மையில் அதே மாணவனின் கல்வியில் இருந்து மக்களின் பொதுவான தேவைகள் அனைத்தும் அரசியல் முடிவுகளுக்குட்பட்டே கிடைக்கின்றன. நோய் முதல் நாடித்தான் அது தணிக்க முடியும் என்பது வள்ளுவர் வாக்கு. அது தெரியாததால்தான், மின்வெட்டுக்கு மின்வாரிய ஊழியர்கள் மீது கோபம் வருகிறது. தவறான இடத்தில் கோபப்பட்டு நம் சக்தியை வீணாக்குகிறோமே தவிர, பிரச்சனைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. உண்மையில் சரியான இடத்தில் தீர்வு கேட்டுப் போராடுபவர்களோடு துணை நிற்காமல் பிரச்சனையுடனே வாழப் பழகிக் கொள்கிறோம். நம் பொதுவான பிரச்சனைகள் அனைத்திலும் தீர்மானிக்கும் சக்தியாக அரசியலே உள்ளபோது, அதைப் பற்றிப் பேசாமல் ‘அது தணிக்கும் வாய்’ நாட முடியாதே? நன்றி : சங்கக் குரல் |
Saturday, July 9, 2011
ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!
மேலே உள்ள படம் சுவிட்சர்லாந்து மாத இதழ் Schweizer Illustriertein - இதழின் நவம்பர் 1991 மாத பதிப்பின் ஒரு பக்கம்.
அப்பக்கத்தில் சுவிஸ் வங்கியில் 1991-ம் ஆண்டு வரை அதிக வைப்பு பணம் வைத்திருப்பவர்களை பட்டியல் இட்டு இருக்கிறது. இதில் நம் நாட்டு ராஜீவ் காந்தியும் இடம் பெற்று இருக்கிறார்.
ராஜீவ் காந்தியின் படத்தின் கீழ் என்ன எழுது இருக்கிறார்கள் தெரியுமா??
Raajiv Gandhi, Indian , Holds 2.5 Billion Swiss Francs (அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 13,200 கோடி (1991ம் ஆண்டு))
ஆனால் இன்று வரை காங்கிரஸ் கட்சியினர் இதனைப் பற்றி மூச்சு விடவில்லை.
இவரைத் தான் Mr.Clean-க நம் முன் நிறுத்தப்படுகிறார் ... இவரின் குடும்பத்தினர் தான் இன்றும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து நம்மை ஆளுகின்றனர்... இவரின் பிறந்த நாளின் போது நம் வரிப் பணத்தில் இவரின் புகழை பரப்புகின்றனர்....
இவர்களா கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவரப் போகிறார்கள்..
எத்தனை காலம் தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே!!!???
Friday, July 8, 2011
இலங்கையின் கொலைக்களம்… முதல்முறையாய் இந்திய மீடியாவில்!!
இலங்கையின் கொலைக்களம்… முதல்முறையாய் இந்திய மீடியாவில்!!
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் பிரிட்டனின் ‘சேனல் 4′ தொலைக்காட்சி தயாரித்த டாக்குமென்டரிப் படம் இந்தியாவில் முதல் முறையாக நேற்று ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் ஒளிபரப்பாகியது.
இன்றும் நாளையும் கூட இந்தப் படம் ஒளிபரப்பாகவிருக்கிறது.
இதயமே இல்லாத மனிதர்கள் கூட பார்த்ததும் கலங்கிப் போய் விடுவார்கள் இந்தக் கோரக் காட்சிகளை. கொடூர மனம் படைத்த ஹிட்லரும், இதயமே இல்லாத இடி அமீனும் உயிருடன் இருந்து இந்த கோரத்தைப் பார்த்திருந்தார்களேயானால், இலங்கை என்றாலே வெறுத்துப் ஓடிப்போய் இருப்பார்கள்.
ஆங்கிலத்தில் Blood bath என்பார்களே… அந்த பதத்துக்கு மிகச் சரியான அர்த்தம் இந்தக் காணொளி மூலம் தெரிந்து கொள்ளலாம். இதைப் போன்ற ஒரு வலி மிகுந்த போராட்டத்தின் முடிவை உலகம் இதுவரை பார்த்திருக்காது.
சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், தன் சொந்த செலவில் இந்த செய்திப் படத்தை காட்சிகளாகத் தொகுத்து உலக மக்களின் பார்வைக்கு வைத்து நியாயம் வேண்டி நின்றது.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குறைந்தது ஒரு முறையாவது இந்த கோரக் காட்சிகளைப் பார்த்து கண்ணீர் வற்றும்வரை இந்த பாவப்பட்ட இனத்துக்காக அழுது தீர்த்திருப்பார்கள்.
தமிழர்கள் அல்லாத எத்தனையோ லட்சம் வெளிநாட்டவர் சக மனிதர்கள் புல்டோசர்களில் நசுக்கப்பட்டு கொல்லப்பட்ட ரத்தச் சேற்றில் புரண்டு கிடந்த காட்சியைக் கண்டு கலங்கியிருப்பார்கள்.
உலகமே இப்படி தமிழனுக்காக தவித்துக் கிடந்தாலும், இந்திய மீடியா உலகம் மட்டும் எதுவுமே நடக்காத மாதிரி அமைதி காத்து வந்தது, போர் நடந்தபோதும் சரி, அதன் கொடுமைகள் அந்நிய முயற்சியில் வெளியான கட்டத்திலும் சரி.
ஆனால் நொய்டாவில் கழுதை செத்துக் கிடந்தால்கூட விடிய விடிய, தொண்டை வலிக்க நியூஸ் வாசித்து கூக்குரல் போடும் வட இந்திய ஆங்கில மீடியா இந்த டாக்குமென்டரிப் படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மனிதாபிமானத்தை உலகுக்குப் போதித்த புத்தனின் சொந்த நாட்டில்தான் இந்த நிலை.
ஆனால் அத்திப் பூத்ததுபோல, ஹெட்லைன்ஸ் டுடே டிவி மட்டும் இந்த டாக்குமென்டரியை சேனல் 4 நிறுவனத்திடமிருந்து வாங்கி நேற்று ஒளிபரப்பியது. அதேசமயம், இந்த டாக்குமென்டரிப் படம் குறித்து கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து செய்திகளையும் ஒளிபரப்பி வந்ததையும் மறுப்பதற்கில்லை.
இலங்கையில் நடந்தேறிய அந்த கோரமான இனப்படுகொலை குறித்த இந்த டாக்குமென்டரிப் படத்தைப் பார்த்த யாருமே நிச்சயம் நேற்று இரவு சாப்பிட்டிருக்க மாட்டார்கள். அப்படி ஒரு அவலம் அந்தக் காட்சிகளில்.
பெண்களை கொடூரமாக கற்பழித்த கதைகள், தமிழர்களை ஈ எறும்பு போல கருதி இலங்கை ராணுவத்தினர் நடத்திய கொடுமை, இளைஞர்களையும், சிறுவர்களையும் கூட கொடூரமாக கொன்று குவித்த அவலம், மருத்துவமனைகளை குறி வைத்து குண்டு வீசி நடத்திய அட்டூழியம், தமிழர்களை நிர்வாணப்படுத்தி கைகளை கட்டி, கண்களைக் கட்டி தலையில் சுட்டுக் கொன்ற அகோரம், இருக்கிற பீஸிலேயே இந்த பீஸ்தான் நல்லாருக்கு என்று நிர்வாணப்படுத்தி கொடூரமாக கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட பெண்ணைப் பார்த்து சிங்கள காடையர்கள் பேசிய அசிங்கமான வசனங்கள் என கண்ணீருக்குப் பதில் கண்களில் ரத்தம் வரவழைக்கும் காட்சிகள் நிறைந்த டாக்குமென்டரி அது.
இன்றும் நாளையும் கூட இந்த டாக்குமென்டரியை ஒளிபரப்புகிறது ஹெட்லைன்ஸ் டுடே. இன்று இரவு 11 மணிக்கும், நாளை இரவு 10 மணிக்கும் இந்த டாக்குமென்டரியைக் காணலாம்.
இலங்கை இனப் பிரச்சினை, தமிழகத்தைத் தாண்டி இந்திய மக்கள் யாருக்குமே சரியாக புரியாத நிலையே இன்று வரை உள்ளது. போர் நடந்தபோதும் சரி, முடிந்தபோதும் சரி, அங்கு நடந்த படுகொலைகள் அநீதிகளும் இந்தியாவின் பெரும்பாலான பகுதி மக்களுக்கு இதுவரை புரியவே இல்லை அல்லது சரியாக போய்ச் சேரவில்லை.
ஆனால் ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பிய டாக்குமென்டரியை இந்தியாவின் அத்தனை பகுதி மக்களும் பார்த்திருப்பார்கள். கண் முன் கண்ட காட்சிகளைப் பார்த்த பிறகாவது சிங்கள காடையர்களின் ஈனத்தனத்தை, இனவெறுப்பை, இலங்கையில் வாழும் தமிழர் எத்தனை பெரிய நரகத்தில் உழல்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
ஈழத் தமிழர்கள் மீதான குறைந்தபட்ச அனுதாபத்தை இந்தியர் மனதில் உருவாக்கவாவது ஹெட்லைன்ஸ் டுடேயின் இந்த ஒளிபரப்பு உதவியிருக்கிறதே என்ற சின்ன ஆறுதல்தான், இன்னமும் இதயத்து ரணம் ஆறாத ஒவ்வொரு தமிழனுக்கும்!
Saturday, July 2, 2011
இன்றைய கல்வி ஏன் ஒழிய வேண்டும்???
இந்தியாவில் நவீனக் கல்வி மெக்காலேயின் வருகையில் இருந்து ஆரம்பிக்கிறது. அன்று, ஆங்கிலேயர்கள் நம்மை ஆளவும் அவர்களுக்கு உதவவும் ஆங்கிலம் தெரிந்த இந்தியர்கள் தேவைப்பட்டனர். அது வரை அநாகரிகத்தின் உச்சத்தில் உள்ள காலனி நாடுகளை நாகரிகப்படுத்தவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தினால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர் தான் மெக்காலே. தங்களது (கிருத்துவ) மதத்தினைப் பரப்பவும் கல்வியை பயன்படுத்தினர். சரி இவர்கள் கல்வி பெற்று சுயமாக சிந்திக்க ஆரம்பித்தால் நம்மையே இவர்கள் எதிர்ப்பார்கள் என்று தெரியாதா ஆங்கிலேயர்களுக்கு. அதனால் கல்வியினை வெறும் அறிவுத் திணிப்பாக மட்டுமே கொடுத்து வந்தனர். அடிமைகளாக இருப்பதே பெரும் பாக்கியம் என்றும் பரப்பி வந்தனர்.
ஆக ஆங்கிலேயர்களுக்கு குமாஸ்தாவாக இருக்க கொண்டுவந்த கல்வியை நாம் ஏன் இன்று வரை மாற்ற வில்லை??
அதனை மாற்ற வில்லை என்றாலும் பரவாயில்லை. அக்கல்வியை பயின்றவர்கள் தான் அறிவாளிகள், புத்திசாலிகள் என்று தவறான பிம்பத்தினையும் ஏற்படுத்தியுள்ளனர். இன்றைய மாணவர்களும் இக்கல்வியை பெற்று மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என்று கனவு கண்டுக் கொண்டுள்ளனர்.
அன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாய் இருக்க கொண்டுவந்த கல்வி முறை இன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் அடிமைகளை உருவாக்க உதவி வருகிறது.
வருடத்திற்கு பல லட்சம் பொறியாளர்களை உருவாக்கும் இந்தியாவில்,இன்று உலகமே உபயோகிக்கும் இந்தியன் கண்டுபிடித்த ஏதாவதொரு பொருளை குறிப்பிடுங்கள் பார்ப்போம். அப்படியே இருந்தாலும் அவை வெளிநாட்டு ஆராய்ச்சிக் கூடத்தில் கண்டுபிடிக்கப் பட்டதாகத் தான் இருக்கும். பல நூறு கோடிகள் கொட்டி உருவாக்கிய IIT,NIT போன்றவற்றால் இந்திய மக்களுக்கு என்ன பலன்? அவைகளில் படித்த எவனாவது நோபல் பரிசு வாங்கினானா? படித்து முடித்தவுடன் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பெற்று செல்வதினால் நமது சமூகத்திற்கு என்ன பயன்?
முதலில் ஒருவன் தனக்கு விருப்பமான துறையினை எடுத்துப் படித்தால் தான் அதில் ஆர்வமும், கற்றுக் கொள்ளும் மனோபாவமும் வளரும். ஆனால் இன்று தனக்கு விருப்பமான துறை எது? நமது திறமை என்ன? என்பதே பல மாணவர்களுக்கு தெரிவதில்லை. ஒரு மாணவனின் திறமையினை கண்டறிந்து வளர்க்க வேண்டிய கல்வி, அதனை முளையிலேயே கிள்ளி எறிவதாய் உள்ளது.
வெறும் மதிப்பெண் எடுப்பதிலேயே மாணவனின் கவனம் குவிக்கப்படுகிறது. என்நேரமும் படி, படி, விளையாட்டா கூடாது, இணையமா கூடாது, வெளியே செல்வதா கூடாது.
அதுவும் பொதுத் தேர்வுகளின் போது மாணவர்கள் படும் மன உளைச்சல் மிகக் கொடுமையானது.
வெறும் மதிப்பெண்கள் ஒருவனின் அறிவுத்திறனை எடுத்துரைக்குமா??
பத்தாவது மற்றும் பணிரெண்டாவதில் அதிக மதிப்பெண் எடுத்ததாலேயே அவன் உயர்ந்தவனாகிவிட்டானா? குறைவான மதிப்பெண் வாங்கியதாலே தாழ்ந்தவனாகிவிடுவானா? மேற்கொண்டு படிக்கப்போகும் இடத்தில் முதல் நாள் ஆசிரியர் கேட்பார்.”யார் எவ்வளவு மார்க் சொல்லுங்க?” மறுபடியும் ஆரம்பித்துவிடும் வேதனை.
பத்தாவதிலேயே அதிக மதிப்பெண் எடுத்த அனைவராலேயும் +2 ல் அதிக மதிப்பெண் எடுக்க முடிவதில்லை, +2-ல் அதிக மதிப்பெண் எடுத்த அனைருமே பட்டப்படிப்புகளில் / பட்டயப்படிப்புக்களில் அதிகம் சாதித்து விடுவதில்லை. அறிவிற்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. மனனம் செய்யும் திறமை தான் இதை தீர்மானிக்கிறது.
முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு அரிசி விலை கிலோ எவ்வளவென்றால் தெரிவதில்லை.கான்வெண்டில் கிழித்த மாணவனுக்கு கடைக்கு போய் மீன் வாங்கிவிட்டு வர தெரிவதில்லை. ஏன் அரிசி விலை ஏறியது, ஏன் விவசாயம் அழிந்து போனது என எதுவுமே தெரியாமல் / தெரியவைக்கப்படாமல் தான் அனைத்து மாணவர்களுமே வளர்க்கப்படுகிறார்கள். மக்களைப்பற்றி கவலைப்படாத சமூகம் அடிமைத்தனமான சமூகம் உருவாக்கப்படுகின்றது.
இதில் அதிக மார்க் எடுத்தவன் உயர்ந்தவன் குறைந்த மார்க் எடுத்தவன் தாழ்ந்தவன் என்பதுதான் வேடிக்கை. இந்தக் கல்விமூறையால் எதை மாற்ற முடியும் உன்னால்? ஏன் உன்னுடைய வாழ்வுக்கான செலவை உன் கல்விமூறையால் மாற்ற முடியுமா? அழிந்து போன விவசாயத்தை மாற்ற முடியுமா ? எதையுமே மாற்ற முடியாத இந்தப்படிப்பு முறை உயர்ந்ததா என்ன? இப்படி மனிதனின் வாழ்வுக்கு தம்புடி அளவுக்குக்கூட பயன் படாத இந்தப்படிப்பு முறையில் அதிக மதிப்பெண் எடுத்தால் என்ன?
குறைவான மதிப்பெண் எடுத்ததற்காக இக்கல்விமுறை மீது வராத கோபம் தனிப்பட்ட மாணவர் மீது வருகிறது. லட்சக்கணக்கானோரில் சிலர்தான் அதிக மதிப்பெண் எடுக்க முடிகிறதெனில் அது யாருடைய தவறு கல்வி முறை யின் மீதா? அல்லது அதை படித்த மாணவர்கள் மீதா ?
போராடும் இவ்வுலகில் போராடாமல் இருப்பதல்லவா தகுதிக்குறைவு?, மக்களைப்பற்றிய அக்கறையின்றி எதைப்பற்றி படிக்கிறாய்? உன் வாழ்வுக்கு, என் வாழ்வுக்கும் மக்களின் வாழ்வுக்கும் துளியும் பயன் படாத இப்படிப்பை தகுதியாய் நிர்ணயித்திருக்கும் இச்சமூகத்தை எதிர்க்காமலிருப்பதல்லவா தகுதிக்குறைவு.
அரசுப்பள்ளிகள் மூடப்படுகின்றன, தனியார் பள்ளிகள் நன்கொடை போதவில்லை என்று பள்ளிகளை இழுத்து மூடுகின்றன.அரசுக்கல்லூரிகள் புதைகுழிக்கு தயராயிருக்கின்றன, பொறியியலெனில் லட்சங்கள், மருத்துவத்திற்கோ கோடிகள் எங்கும் பணம் தான் எதிலும் பணம்தான். பத்தாவதிலும் பனிரெண்டாவதிலும் முதல் பாடம் எடுத்தவன் தானா இன்று கல்விக்கட்டணங்களை குறைக்கக்கோரும் களத்தில் நிற்கிறான்?அது நிர்ணயிப்பதல்ல, சமுகத்தின் மீதான அக்கறை தான் போராடத் துண்டுகிறது
படிக்கும் மாணவனுக்கு எதற்கு அரசியல்? படிக்கும் மாணவனுக்கு அல்லாமல் வேறு யாருக்கு? உன் தாயின் தாலி கல்லூரி தாளாளரின் பற்களில் மின்னும் வேளையில் உன்னையன்றி யார் போராடுவார்கள்? இன்ஸ்டால்மெண்ட் கட்டணத்தை கட்ட முடியாமல் நீ வேதனையுறுவதை, வெளியில் நிற்க வைத்து அவமானப்படுவதை உன்னையன்றி யார் அறிவார்? உனக்கு உன்னைத்தவிர யார் போராட முடியும்?
பணமின்றி படிப்பதற்கு படிப்பொன்று இருக்கிறது. ஆம் மக்களைப்படி, அவர்களிடமிருந்து கல், அவர்களுக்கே கற்றுக்கொடு, அதற்காக உன்னை படிக்க வேண்டாமென்று சொல்லவில்லை. இந்த விளங்காத படிப்பை விளங்க வைக்க மக்களையும் சேர்த்துப்படி. மதிப்பெண் குறைவென்றும் தேர்வில்தோல்வியுற்றனென்றும் உன்னை கிண்டலடித்தவர்களை எதிர்த்து , போராத அடிமைகளே என்று நீ எள்ளி நகையாடு. இனி நீ தான் ஆசிரியன்
வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக தான் நமது குழந்தைகளை மாற்றி வருகிறோம்... பணம் பண்ணும் கருவியாக கல்வியை பார்க்காமல் மனிதத்தை சமூகத்தை அறிவியலை வாழ்வியலை அறியும் ஆயுதமாய் கல்வி மாற வேண்டும்
விடாமல் ஊட்டப்பட்டு வரும் கிரிக்கெட் போதை
மதங்களைப்போல, சினிமா போல எல்ல உணர்வுகளையும் மழுங்கடிக்கும் ஒருவித மயக்கமாக கிரிக்கெட் இருக்கிறது என்பதை விளக்க இப்போதைய சூழலில் ஆதாரம் ஏதும் தேவையில்லை. பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளால்(Common Wealth) விளையாடப்பட்டுவரும் இந்த கிரிக்கெட் நாட்டுப்பற்றை அளக்கும் ஒரு அளவுகோலாக இருக்கிறது. விரித்துப்பார்த்தால் கிரிக்கெட்டை நேசிக்காதவர்கலால் நாட்டை நேசிக்கமுடியாது எனும் அளவிற்கு அது மக்களை மயக்கியிருக்கிறது, தவறு மயக்கவைகப்பட்டிருக்கிறது. உலக அளவில் பிரபலமான எல்லா விளையாட்டுகளும் லாபம் தரும் தொழில் என்றாகிவிட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் கழகமோ பலநூறு கோடி லாபம் பார்க்கும் நிறுவனமாக இருக்கிறது. இதனாலேயே வேறு வேறு நாடுகளுடன் தொடர்ச்சியாக போட்டிகளை நடத்திக்கொண்டிருக்கிறது. எரிந்து கொண்டிருக்கும் மக்கள் பிரச்சனைகளைவிட்டு கவனம் திருப்ப எல்லா ஊடகங்களும் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. தொலைக்காட்சிகள் விளம்பரங்களையே நேரலையாக ஒளிபரப்பி கல்லா கட்டுகின்றன.
இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்துவரும் இலங்கை அரசை எதிர்த்தும், அதற்கு எல்லாவிதத்திலும் உதவி செய்தும் ஊக்கமளித்தும் மறைமுகமாக போரை நடத்தும் இந்தியாவை எதிர்த்தும் தமிழகத்தில் எல்லாத்தரப்பு மக்களும் போராடிக்கொண்டிருக்க, மறுபுரத்தில் இலங்கை இந்திய அணிகள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கின்றன. கிரிக்கெட்டின் வெற்றியை இந்திய நாட்டின் வெற்றியாக பூரித்துப்போகும் இந்திய இளைஞனுக்கு, குழந்தைகளையும், முதியவர்களையும் கூட இரக்கமற்ற முறையில் கொன்றுகுவிப்பதற்கு துணை நிற்கும் இந்திய அரசின் கொடூரம் எப்படிப்புரியும்?
சமூகம் பற்றியும், சூழல் பற்றியும் எந்த உணர்வுமில்லாமல் தொலைக்காட்சிப்பெட்டியை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, நாடே வெற்றிபெற்றுவிட்டதாய் பெருமைப்பட்டுக்கொள்ளும் அல்லது தோற்றுவிட்டதாய் கவலைப்படும் இந்த தேச பக்தர்களைப்போல் நாடு என்பது மட்டையோடும், பந்தோடும் முடிந்து போகும் ஒன்றல்ல. நாட்டின் மக்கட்தொகையில் எழுபது விழுக்காட்டிற்கும் அதிகமானோர் இருபது ரூபாய் வருமானத்தில் ஒரு நாளை கழிக்கிறார்கள் என்பது இவர்களுக்குத்தெரியுமா? முப்பத்தைந்து விழுக்காட்டினர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உறைக்குமா? அதற்கு நான் என்ன செய்யமுடியும் என்று அலட்சியமாக தோளைக்குலுக்குபவர்கள் ஒரு உதாரணத்திற்காக தாங்கள் அணிந்திருக்கும் சட்டை எத்தனை ஆயிரம் கைகளின் உழைப்பைத்தாண்டி தங்களிடம் வந்திருக்கிறது என்பதை எண்ணிப்பார்த்துக்கொள்ளட்டும்
அவசியம் இதனையும் படிக்கவும்
நன்றி :: செங்கொடிச் சிறகுகள்
அன்னா ஹஸாரே நடுத்தர வர்க்கத்தின் குரல்
இந்திரா காந்தியின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறியபோது “ஊழல் ஓர் உலகளாவிய விஷயம்” என்றார் இந்திரா. உண்மைதான். ஆனால் மற்றொரு விஷயத்தை அவர் தனக்கு வசதியாகச் சொல்லாது விட்டுவிட்டார். வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளிலும் ஊழல் உண்டு. அது இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நடைபெறும் ஊழலிலிருந்து இரண்டு விஷயங்களில் வேறுபடுகிறது. அந்த நாடுகளில் அரசாங்கத்தின் எல்லா மட்டங்களிலும் ஊழல் என்பது கிடையாது. அங்கே சட்டத்தை மீறுவதற்கும் தவறுக்குத் துணைபோவதற்குமே லஞ்சம் கேட்கப்படும். ஆனால் இங்கோ உள்ளூர் காவல் நிலையம், தாலுகா அலுவலகத்திலிருந்து பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் மாளிகைவரை ஊழல் புகாத இடமேயில்லை என்னும் நிலை. மேலும் ஓர் அரசு ஊழியர் என்ன வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறாரோ அந்த வேலையை, கடமையைச் செய்யவே அவர் லஞ்சம் கேட்கும் நிலை.
இந்தியாவில் தொழிற்துறைமீது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதாலேயே (லைசன்ஸ் ராஜ்) ஊழல் மலிந்துவிட்டது என்று தனியார்மயத்தைக் கொண்டாடும் அறிவுஜீவிகள் கூறுகின்றனர். இந்தக் கருத்து இந்தியாவின் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்து மக்களால் கண்மூடித்தனமாக ஏற்கப்பட்ட கருத்து. குறிப்பாக ஆங்கிலக் கல்விகற்ற நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கம் இந்தக் கருத்தை ஏதோ ஓர் இறைத்தூதரால் சொல்லப்பட்ட சத்திய வாக்காக எடுத்துக்கொண்டதுடன் நாட்டின் எல்லாத் தீமைகளுக்கும் பொதுத் துறையும் அரசியல்வாதிகளுமே காரணங்கள் என்றும் கண்டுபிடித்தது. நடுத்தர வர்க்கத்தின் இந்த மனநிலை பற்றியும் அதன் யோக்கியதை பற்றியும் பின்னர் பார்ப்போம்.
1990க்குப் பிறகு நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் கூட்டணியால் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வழி காட்டுதலுடன் (உத்தரவின்படி?) இந்தியப் பொருளாதாரம் தனியார் மற்றும் தாராளமயமாக்கப்பட்டது. பொருளாதாரத்தின் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் பெரிதும் தளர்த்தப்பட்டன. இதன் விளைவு: இந்தியா 55 பில்லியனர்களை (அதாவது 100 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்துடையவர்கள், இந்திய ரூபாயில் சுமார் 4500 கோடிக்கும் அதிகம்) உருவாக்கியுள்ளது. போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் பட்டியலின்படி உலகின் முதல் பத்து பணக்காரர்களில் இரண்டு அல்லது மூன்று இந்தியர்கள் இடம்பெறுவது என்பது சமீபகாலங்களில் வழக்கமாகிவிட்டது என்ற அளவிற்கு இந்தியா ‘முன்னேறியுள்ளது’. இவர்கள்தாம் பின்பற்றத் தகுந்த நாயகர்களாக நடுத்தர வர்க்கத்தால் கொண்டாடப்படுபவர்கள். 1990க்கு முன்னர் இந்தப் பட்டியலில் இடம் பெறும் இந்தியர்கள் மிகக் குறைவு என்பதுடன் முதல் பத்து இடங்களில் எந்த இந்தியக் கோடீஸ்வரரும் இடம்பெற்றதில்லை. இப்போது இந்தியா ‘முன்னேறிவிட்டது’. இன்றைய நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 25 சதவிகிதத்தைக் கட்டுப்படுத்துவது 0.00001 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள். மோசமான சமத்துவமின்மை நிலவும் அமெரிக்கா போன்ற நாடுகளோடு ஒப்பிட்டால்கூட இந்தியாவின் நிலை மிகமிக மோசம். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் இடம்பிடிக்கும் இந்தியா, ஐநா மனித வளர்ச்சி குறியீடு பட்டியலில் 134ஆம் இடத்திலிருக்கிறது. சுமார் 84 கோடிப் பேர் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் வழியில்லாது இருக்கின்றனர்.
உலகின் ஆகச் சிறந்த பொருளாதார மேதைகளுள் ஒருவரான ஆடம் ஸ்மித்தின் பொருளாதாரத் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த முதலாளித்துவத்தால் இந்தியாவில் இவ்வளவு கோடீஸ்வரர்கள் உருவாகவில்லை. (ஸ்மித்தின் பொருளாதாரத் தத்துவத்திற்கும் இன்று அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் முதலாளித்துவத்திற்கும் உள்ள ஒற்றுமைகளைவிட வேற்றுமைகள் மிக அதிகம்.) மாறாக நாட்டின் இயற்கை மற்றும் தாது வளங்களும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்னும் பெயரில் ஏராளமான நிலங்களும் சுரங்கங்கள், அலைக்கற்றை மற்றும் வர்த்தக உரிமங்களும்பத்தில் ஒரு பங்கு மதிப்பிற்கும் சில சமயங்களில் நூறில் ஒரு பங்கு மதிப்பிற்கும் பெருமுதலாளிகளுக்கும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கும் 1990க்குப் பிறகு வந்த அரசாங்கங்கள் அளித்ததன் விளைவு இது. இதில் நடந்த ஊழலில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள் ஆகிய மூன்று தரப்புக்கும் சமமான பங்குண்டு. தனியார்மயமாக்கல் ஊழலுக்கும் திறனின்மைக்குமான முறிவு மருந்து என்று சொன்னவர்கள் இப்போதும் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. தங்கள் கருத்திற்கு எதிராகப் பலமான வாதங்களும் ஆதாரங்களும் வைக்கப்படும்போது தங்களது பழைய கருத்தை மேலும் மேலும் பிடிவாதமாகப் பற்றிக்கொள்வது என்பது பெரும்பாலானவர்களின் இயல்பு. ஆக அவர்களிடம் கருத்து மாற்றத்தை எதிர்பார்ப்பது வீண். இந்தியப் பொருளாதாரம் எந்த அளவிற்கு ராட்சச வேகத்துடன் வளர்ந்ததோ அதே வேகத்தில் ஊழலும் வளர்ந்தது. ஒரு சில கோடீஸ்வரர்களை உருவாக்க பல கோடி சாதாரண மக்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டது. ஊழல் அதன் உச்சத்தைத் தொட்டுவிட்டதா அல்லது இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கிறதா என்பதை உறுதியாகச் சொல்லமுடியவில்லை.
இந்தப் பின்னணியில்தான் அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தையும் அதற்குக் கிடைத்த அசாதாரணமான ஆதரவையும் பார்க்கவேண்டும். ஏப்ரல் 5ஆம் தேதி அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய அன்றே நாடு முழுவதும் அதற்கு அனைத்துத் தரப்பு மக்களின் ஒருமித்த ஆதரவு கிடைத்தது. இந்திரா காந்தியின் அரசுக்கு எதிராக 1974இல் ஜெய பிரகாஷ் நாராயண் தொடங்கிய இயக்கத்திற்கும் எமர்ஜென்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கும் கிடைத்த ஆதரவைவிட ஹஸாரேவிற்குக் கிடைத்த ஆதரவு அதிகம். இதற்கு இரு காரணங்கள். ஒன்று, கடந்த சில வருடங்களாக அம்பலமாகிக்கொண்டிருக்கும் ஊழல்களின் அளவும் எண்ணிக்கையும் மக்களிடம் அரசியல், அரசியல்வாதிகள்மீது பெருங்கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொந்தளித்துக்கொண்டிருந்த கோபத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏதுமில்லாது இருந்தார்கள். இரண்டு, ஊடகங்கள், குறிப்பாகத் தொலைக்காட்சி சானல்கள் ஆற்றிய பங்கு. இத்தகைய ஓர் இயக்கத்தை நடத்துவதற்குத் தகுதிபெற்ற அரசியல்வாதிகள் இன்று இந்தியாவில் யாருமில்லை. நேர்மையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத அரசியல் தலைவர்கள் சிலர் இருந்தபோதிலும் அவர்கள் பல சமயங்களில் தங்களது கட்சியின் அல்லது கட்சித் தலைவர்களின் தவறுகளை, ஊழல்களை மறைக்கும் மற்றும் மறுதலிக்கும் நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள். இந்நிலையில் ஊழல் கறைபடியாத மனிதர், அதிலும் காந்தியவாதி ஒருவர் போராட்டத்தைத் தொடங்கியவுடன் அதற்காகவே காத்திருந்ததைப் போல ஒட்டுமொத்த இந்தியாவும் கிளர்ந்தெழுந்தது. இத்தகைய ஒரு கிளர்ச்சியை, ஆதரவை ஹஸாரேவோ அர்விந்த் கேஜ்ரிவாலோ எதிர் பார்க்கவில்லை என்பதும் உண்மை. ஆளும் அரசாங்கம் ஆடிப்போனதும் உண்மை. சமீபத்தில் டுனீஷியா, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் எழுந்த மக்கள் போராட்டங்களும் அவற்றின் அரசியல் விளைவுகளும் இங்கும் உருவாகிவிடுமோ என்ற அச்சம் இந்திய அரசுக்கு ஏற்பட்டது என்பது உண்மை. ஆனால் தனது போராட்டம் இன்னும் சில நாட்கள் தொடர்ந்திருந்தால் இந்த அரசாங்கம் கவிழ்ந்திருக்கும் என்று ஹஸாரே உறுதியாக நம்புவது எதார்த்தத்திற்குப் புறம்பான அவரது மிகை நம்பிக்கையைக் காட்டுகிறது.
ஊழலை ஒழிப்பதற்காகக் குடிமைச் சமூக முயற்சியில் உருவான ஜன் லோக்பால் மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்னும் ஒரே கோரிக்கையுடன் ஹஸாரேவின் உண்ணாவிரதம் தொடங்கியது. ஆங்கிலத்தில் ombudsman எனச் சொல்லப்படுவதற்கு இணையானது இது. இதன் முன்வரைவை உருவாக்கியதில் புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன், தகவலறியும் உரிமைக்கான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி ஆகியோர் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) ஆகியவை ஆளும் கட்சிகளின் விரலசைவுக்கேற்ப ஆடும் பொம்மைகளாகிவிட்ட நிலையில் ஊழலை ஒழிக்க ஒரு புதிய அமைப்பு அதிலும் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகும் அதிகார வர்க்கம், காவல் துறை, அமைச்சர்கள் ஆகியோரின் அதிகாரத்திற்குட்படாது இயங்கக் கூடிய ஓர் அமைப்பு தேவை என்பது இவர்களின் வாதம். நீதித் துறை இன்றிருக்கும் லட்சணத்தில் ஊழலை ஒழிக்க, நீதி நிலைநாட்ட நீதிமன்றங்களை மட்டும் நம்பியிருப்பது என்பது அடி முட்டாள்தனம் என்பதும் இவர்களது வாதம். இதில் தவறேதும் காண முடியாது. ஒரு நாட்டின் சகல துறைகளும் (குடிமைச் சமூகம் உட்பட) ஊழலில் திளைத்திருக்கும் போது ஒரு புதிய அமைப்பு, அணுகு முறை தேவை என்பது தவிர்க்க முடியாதது.
ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோரை விசாரிக்கவும் புலனாய்வு செய்யவும் அவர்கள்மீது வழக்குத் தொடுக்கவும் அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பாக லோக்பால் இருக்க வேண்டுமென்றும் ஒரு வர்த்தக உரிமம் அல்லது ஒப்பந்தமானது லஞ்சம் பெற்றுக்கொண்டு தரப்பட்டிருக்குமெனில் தரப்பட்ட உரிமத்தை, ஒப்பந்தத்தை ரத்துசெய்யும் உரிமையும் லோக்பால் பெற்றிருக்க வேண்டுமென்றும் ஹஸாரேவும் அவருடைய ஆதரவாளர்களும் கோருவது நிர்வாகம், காவல் துறை, நீதித் துறை ஆகிய மூன்றின் அதிகாரத்தை ஒருங்கே கோருவதற்குச் சமம் என்பது இதை எதிர்ப்பவர்களது வாதம். ஆனால் பிரஷாந்த் பூஷன் கூறுவதுபோல் இது தவறான கருத்து என்பதுடன் இந்த வாதத்தை எழுப்புபவர்கள் (ஒரு சிலரைத் தவிர்த்து) பெரும்பாலும் இன்றைய நிலை தொடர்வதை விரும்புபவர்கள் அல்லது தொடர்வதில் ஆதாயமுள்ளவர்கள். லோக் பால், நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் கோரவில்லை. மாறாக ஊழலில் ஈடுபடும் இரு தரப்பும் (பெறுபவர்கள், தருபவர்கள்) தண்டிக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டுமானால் லோக்பால் பரந்துபட்ட அதிகாரம் கொண்ட அமைப்பாக இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆனால் பல அமைப்புகளுக்கு (சிபிஐ, சிவிசி, நீதிமன்றங்கள்) ஏற்பட்ட கதி இதற்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அல்லது இவ்வளவு அதிகாரம் கொண்ட இந்த அமைப்பு ஒரு சர்வாதிகார அமைப்பாக மாறாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அம்பேத்கர் கூறியதைப் போல் ஒரு நல்ல அரசியல் சாசனச்சட்டம் அதைச் செயல்படுத்துகிறவர்கள் மோசமானவர்களாக இருக்கும் பட்சத்தில் மோசமாவதும் மோசமான அரசியல் சாசனச்சட்டம் அதைச் செயல்படுத்துகிறவர்கள் மேன்மையானவர்களாக இருக்கையில் சிறப்படைவதும் இயல்பானதே. ஓர் அரசியல் சாசனச்சட்டத்தின் செயல்பாடு என்பது அதன் இயல்பை மட்டுமே பொறுத்ததல்ல என்று அவர் கூறியது மிகுந்த தொலைநோக்கு கொண்ட கருத்து. காலஞ்சென்ற குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் கூறியதைப் போல் அரசியல் சாசனச்சட்டம் நம்மைக் கைவிடவில்லை, நாம்தான் அரசியல் சாசனச்சட்டத்தைக் கைவிட்டுவிட்டோம். ஆக, லோக் பால் அமைப்பை நாம் கைவிட மாட்டோம் என்பதற்கும் அது ஊழலில் சிக்கிவிடாது என்பதற்கும் என்ன பொறுப்புறுதி (guarantee) இருக்கிறது? முற்றிலும் வெளிப்படைத்தன்மை, அதாவது லோக் பால் செயற்பாடுகளின் ஒவ்வொரு அசைவும் (அதன் உறுப்பினர்களின் தகுதி, அவர்கள் தெரிவு செய்யப்படும் விதம் உட்பட) மக்களுக்குத் தெரியும்வண்ணம் அமைவது என்பது இன்றிருக்கும் பல்வேறு அமைப்புகளிலிருந்து மாறுபட்ட அமைப்பாக அது விளங்குவதற்கு அடிப்படையாக அமையும். லோக்பால் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதில் பொதுமக்களின் பங்கு மிக முக்கியமானதாக இருப்பதையும் உறுதி செய்யவேண்டும். இந்தக் கருத்துகளை ஹஸாரே, பூஷன், கேஜ்ரிவால் ஆகியோர் தங்களது கட்டுரைகளிலும் பேட்டிகளிலும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
லோக்பால் மசோதா வரைவுக்கான கூட்டுக் குழுவை நியமிப்பதாக அரசாங்கம் அறிவித்த பிறகு ஏப்ரல் 9ஆம் தேதி, ‘இது ஆரம்பமே இனி தான் போராட்டம் இருக்கிறது’ என்று கூறித் தனது உண்ணா விரதத்தை ஹஸாரே முடித்துக்கொண்டார். ‘ஊழலுக்கு எதிராக இந்தியா’ என்னும் இந்தப் போராட்டம் ஒரு முக்கிய வெற்றியைச் சந்தித்திருக்கிறது என்றாலும் ஹஸாரே கூறியது போல் இது ஓர் ஆரம்பம் மட்டுமே. கூட்டுக் குழுவில் குடிமைச் சமூகத்தின் சார்பில் அன்னா ஹஸாரே, சாந்தி பூஷன், நீதிபதி என். சந்தோஷ் ஹெக்டே, பிரசாந்த் பூஷன், அர்வித் கேஜ்ரிவால் உறுப்பினர்களாகவும் அரசாங்கத்தின் சார்பில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம் வீரப்ப மொய்லி, கபில்சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோரும் உறுப்பினர்கள். இக்குழுவின் தலைவர் பிரணாப் முகர்ஜி, இணைத் தலைவர் சாந்தி பூஷன். மசோதா என்ன வடிவம் எடுக்கப் போகிறது என்பதும் அதன் கதி நாடாளுமன்றத்தில் என்ன ஆகும் என்பதும் அடுத்த சில மாதங்களில் தெரிந்துவிடும்.
ஹஸாரே மிகச் சிறந்த சமூக சேவகர், காந்தியவாதி, அப்பழுக்கற்றவர் என்றபோதிலும் போராட்டத்தின்போது அவர் கூறிய சில கருத்துகள் மிகுந்த சர்ச்சைக்குள்ளாயின. ஊழலில் ஈடுபடுபவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று கூறியது, நரேந்திர மோடியின் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களைப் புகழ்ந்தது, போராட்டத்திற்கு ஆதரவு தந்து ஆர்.எஸ்.எஸ். அனுப்பிய கடிதத்தைப் பெற்றுக்கொள்வதில் அவர் காட்டிய ஆர்வம் ஆகியவை ஹஸாரேவின் அரசியல் தெளிவின்மையை, முதிர்ச்சியின்மையைக் காட்டுகின்றன. ஹஸாரே போன்ற தார்மீகத் தகுதி கொண்ட மனிதர் கூறும் கருத்துகள் மக்களால் கண்மூடித்தனமாக வேதவாக்காக ஏற்கப்படும் என்பதால் அவர் தன் கருத்துகளைக் கூறுவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ஹஸாரேவின் போராட்டம் அரசாங்கத்தை பிளாக்மெயில் செய்வதாகவும் மக்களாட்சியைப் பலவீனப்படுத்துவதாகவும் பிரதாப் பானு மேத்தா குறைகூறியிருந்தார். இதே கருத்தை அறிவுஜீவிகள் வேறு சிலரும் கூறியிருந்தனர். அரசியல் சாசனச்சட்டத்தின் அடிப்படையிலான ஓர் அரசாங்கத்தை இத்தகைய போராட்டங்கள் பலவீனப்படுத்திக் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்ற வகையில் அம்பேத்கர் கூறியிருந்த கருத்தையும் மேற்கோள் காட்டியிருந்தனர். இந்தியாவில் மக்களாட்சியின் மாண்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையும் சட்டத்திற்குட்பட்டுக் கோரிக்கை மனுக்களைத் தரும்போது அவற்றிற்கு நேரும் கதி என்ன என்பதையும் தெரிந்தே இவர்கள் இந்தக் கருத்தைக் கூறுகிறார்கள். இன்றைய மக்களவை சுதந்திர இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15ஆவது மக்களவை. பெரும்பான்மையான வாக்காளர்களால் (வாக்களிப்பவர்களில்) தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை ஒருபோதும் பெரும்பான்மையான மக்களின் விருப்பங்களை, தேவைகளைப் பிரதிபலித்ததில்லை. இதைப் புரிந்துகொள்வதற்கு ஒருவர் அரசியல் கல்வியில் பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பான்மையான மக்களின் நியாயமான கோரிக்கைகள் எப்படி அலட்சியப்படுத்தப்படுகின்றன என்பதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களை அடுக்க முடியும். நர்மதா பச்சாவ் அந்தோலன் (நர்மதா நதி பாதுகாப்பு இயக்கம்) ஓர் உதாரணம். நவீன அரசின் நிர்வாகம் என்பது மொத்த முதலாளித்துவத்தின் பொதுவிவகாரங்களை மேலாண்மை செய்வதற்கான ஒரு குழு என்று கார்ல் மார்க்ஸ் 163 வருடங்களுக்கு முன்னர் சொன்னது இன்றுவரை எள் முனையளவும் மாறாத ஓர் எளிய உண்மை. இதை ஒருவர் உணர மார்க்ஸைப் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்தப் போராட்டத்தின்போது ஆங்கிலக் கல்வி கற்ற நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கமும் ஊடகங்களும் காட்டிய அளவற்ற உற்சாகமும் ஆதரவும் அவற்றின் இரட்டை வேடத்தன்மையை, கபடத்தன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. ‘‘இரட்டை வேடத்தின் (hypocrisy) சாபக்கேடு அது மற்றவர்களின் கண்களுக்குத் தெரிகிறது என்பதல்ல. மாறாக அதைப் போடுகிறவர்களின் கண்களுக்கு அது தெரிவதில்லை என்பதுதான்’’ என்றார் உளவியல் பேராசிரியரும் ஸ்கெப்டிக் இதழின் தலைமை ஆசிரியருமான மைக்கல் ஷெர்மர். ஆகவே இந்திய நடுத்தர வர்க்கத்திற்கும் அந்த வர்க்கத்தினரால் நிரம்பியிருக்கும் ஊடகங்களுக்கும் தங்களது இரட்டை வேடம் தெரியவில்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. உதாரணமாக நர்மதா பச்சாவ் அந்தோலனை (நர்மதா நதி பாதுகாப்பு இயக்கம்) எடுத்துக்கொள்வோம். நர்மதாவின் குறுக்கே கட்டப்படும் சர்தார் சரோவர் அணை, நர்மதா சாகர் அணை காரணமாக 250,000க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளனர். (இத்திட்டங்களுக்காகப் பெரும் காட்டுப்பகுதியே அழிக்கப்பட்டது. இதன் காரணமாகப் பெரும் சுற்றுச் சூழல் கேடு ஏற்பட்டுள்ளது தனிக் கதை. இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டபோது அது குறித்து அங்கு வாழும் மக்களுக்கு முன் கூட்டிச் சொல்லப்படவும் இல்லை.) தங்களது மறுவாழ்விற்காகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேதா பட்கர், பாபா ஆம்தே தலைமையில் அம்மக்கள் போராடி வருகின்றனர். அதிகாரிகளிடமும் அரசுத் தலைவர்களிடமும் மனுக் கொடுத்தல், அமைதியான, காந்திய வழியில் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துதல், பல நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருத்தல் என எல்லா வழிகளையும் பார்த்துவிட்டு (இவர்களது உண்ணாவிரதத்திற்கும் பாலிவுட் நடிகர் அமீர் கானும் தனது ஆதரவை நேரில் வந்து தெரிவித்திருந்தார்.) பின்னர் நீதிக்காக உச்ச நீதிமன்றம்வரை சென்று இதுவரை எதுவும் நடக்கவில்லை. இந்த இயக்கம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. ஆனால் இவர்களது நியாயமான, நீதியான போராட்டம் இந்திய நடுத்தர வர்க்கத்தின் மனசாட்சியின் கதவுகளை ஏன் தட்டவில்லை? சிங்கூரில் நேனோ கார் தொழிற்சாலைக்காகச் சில நூறு ஏக்கர்களை மேற்கு வங்க மாநில அரசாங்கம் கையகப்படுத்தி, இதுவரை இந்திய வரலாற்றில் எந்த அரசாங்கமும் தராத அளவிற்கு, சந்தை விலையைவிடக் கூடுதலான விலையை விவசாயிகளுக்குத் தந்தது. சுமார் 75 சதவிகித விவசாயிகள் நிலத்தை விற்க ஒப்புக்கொண்டனர். தொழிற்மயமாக்கத்தைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் கூட்டமும் ஊடகங்களும் புத்ததேவ் பட்டாசார்ஜியை ஆதரிப்பதற்குப் பதிலாகக் கொள்கைகள் ஏதுமற்ற சந்தர்ப்பவாதியான மம்தா பானர்ஜியை ஆதரித்தனர். இடதுசாரி அரசாங்கம் என்னும் பூதத்தை விரட்டுவதற்காகத் தீவிர இடதுசாரிகள் முதல் தீவிர வலதுசாரிகள்வரை அனைவரும் கைகோத்தனர். விவசாயிகள் சிலர் நிலம் தர மறுத்ததை மீறி அவர்களது நிலத்தைக் கையகப்படுத்தியதற்காக ஒட்டு மொத்த தேசமே அவர்கள் பின்நின்றது. ஆனால் இருபதாண்டுகளுக்கு மேலாக சர்தார் சரோவர் அணை கட்டப்படும் இடத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடியும் இந்தத் தேசத்தின் மனசாட்சியை அசைக்க முடியவில்லை. இது நடுத்தர வர்க்கத்தின் இரட்டை வேடமில்லாமல் என்ன?
மணிப்பூரின் இரோம் ஷர்மிளா, மணிப்பூரில் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள ராணுவப் படைகளின் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (Armed Forces Special Powers Act) திரும்பப்பெறப்பட வேண்டுமென்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதமிருந்து வருகிறார். மிகப் பெரும் மக்கள் ஆதரவின் காரணமாக ஹஸாரேவின் உண்ணாவிரதத்திற்கு உடனடியாக, நேர்மறையாக எதிர்வினை புரிந்த மத்திய அரசு அத்தகைய அகில இந்திய ஆதரவு ஏதும் ஷர்மிளாவிற்கு இல்லாததால் அவரை அவ்வப்போது கைதுசெய்து வலுக்கட்டாயமாகக் குழாய்கள் மூலம் திரவ உணவை அனுப்புகிறது. ஷர்மிளாவின் கோரிக்கைக்கு இந்திய நடுத்தரவர்க்கம் செவிசாய்க்காததற்குக் காரணம் அவர் இந்திய அரசின் அதிமுக்கியக் கருவியும் இந்தியாவின் புனிதப் பசுவுமான ராணுவத்தைக் கேள்விக்குட்படுத்தியதே. ஒரு நியாயமான போராட்டத்திற்கு அமோக ஆதரவையும் ஆனால் அதைவிட நியாயமான, நீதிக்கான மற்றொரு போராட்டத்திற்கு அலட்சியத்தையும் நல்குவது இரட்டை வேடமில்லாமல் என்ன?
ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்வோம்: ஊழலை எதிர்த்து அல்லாமல் காஷ்மீர் மக்களின் பிரச்சினைக்காகவோ வடகிழக்கு மக்களுக்காகவோ பெரும் தொழிற்திட்டங்களால் தங்கள் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து இடப் பெயர்விற்கு ஆளாகும் பழங்குடி மக்களுக்காகவோ ஹஸாரே சாகும் வரை உண்ணாவிரதமிருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஊடகங்களின் உற்சாக ஆதரவு கிடைத்திருக்காது என்பதுடன் நடுத்தர வர்க்கமும் இது போன்று சிலிர்த்துக் கிளர்ந்து எழுந்து ஆதரவு தெரிவித்திருக்காது. ஷர்மிளாவின் கதிதான் அவருக்கும் நேர்ந்திருக்கும். மேலும் மேலும் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், வகுப்புவாதம் மனித உரிமை மீறல்கள், பழங்குடி மக்களின் இடப்பெயர்வு, வறுமை, மிகமிக அடிப்படையான வசதிகள்கூடக் கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைக்காமை ஆகியவை ஊழலைவிட மிக மோசமாக மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள். ஆனால் இதற்கு எதிரான போராட்டங்களுக்குப் படித்த நடுத்தர வர்க்கத்தின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது.
ஊழலுக்காக அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் சாடும் நடுத்தர வர்க்கம் இந்தியாவில் அரசியல், நிர்வாகம் காவல் துறை, ராணுவம் நீதித் துறை, ஊடகம் மருத்துவம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் என ஒரு துறை மீதமில்லாமல் அனைத்தும் ஊழலால் புரையோடிப் போயிருப்பது எப்படிச் சாத்தியம் என்பதை யோசிப்பதேயில்லை. அதை யோசித்தால் தனது பங்கு அதில் எப்படி அதிமுக்கியமானது என்பதை அது உணர்ந்திருக்கும். இதில் நான் கார்ப்பரேட் துறையைக் குறிப்பிடாததற்குக் காரணம் ஊழலில் மேலே சொல்லப்பட்ட அனைவரையும் தூக்கிச் சாப்பிடக் கூடியவர்கள் அவர்கள். சரியாகச் சொன்னால் ஊழலின் ஊற்றுக்கண் அவர்கள். ஆனால் இவர்களிடம் பணியாற்றுவதும் இவர்களில் ஒருவராக ஆவதும்தான் நடுத்தர வர்க்கத்தின் அதிகபட்சக் கனவு. ஒட்டு மொத்தச் சமூகத்தின் பெரும்பகுதி வாய்ப்பு கிடைத்தால் ஊழல் செய்வதற்குத் தயார் என்ற நிலையில் (potentially corrupt) இருந்தாலொழிய சகல துறைகளும் இப்படி ஆகாது. அரசியலை விட்டுவிடு வோம். பிற துறைகளுக்கான ஆட்கள் எங்கிருந்து வருகிறார்கள்? பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்திலிருந்து. உள்ளார்ந்த வகையில் நடுத்தர வர்க்கமே அயோக்கியத் தனமானது என்று நான் வாதிப்பதாக இதைப் புரிந்துகொள்வது தவறு. கடந்த சில பத்தாண்டுகளாக நாம் உருவாக்கியிருக்கும் அமைப்பு அத்தகையது. அதில் ஊழல் என்பது விதி, நேர்மை என்பது விதிவிலக்கு. தங்களது ஓட்டுக்குக் குறைவாகப் பணம் தருவதற்காகவும் பணம் தராது போய்விடுவதற்காகவும் வேட்பாளரிடம் மக்கள் சண்டை போடும் நிலை தமிழகத்தில் உருவாகியிருப்பதை வேறெப்படி விளங்கிக்கொள்ள முடியும். ஏறக் குறைய 80 சதவிகித மக்கள் எந்த விதமான கூச்சமும் இல்லாமல் அரசியல் கட்சிகளால் தங்களுக்குத் தரப்படும் பணத்தை ஏற்றுக்கொள்வதை எப்படி விளக்குவது? இத்தகைய அமைப்பில் ஊழல் செய்கிறவர்களே வெற்றிபெற முடியும் நீடித்திருக்க முடியும் என்னும் நிலை. மார்க்ஸ் கூறியதைப் போல் மனிதர்களின் சிந்தனையல்ல அவர்களது வாழ்நிலையை நிர்ணயிப்பது, மாறாக அவர்களது சமூக வாழ்நிலை தான் அவர்களது சிந்தனையை நிர்ணயிக்கிறது. ஆக இந்த அமைப்பை மாற்றுவது என்பதே இதற்கான சரியான தீர்வாக இருக்க முடியும். அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குற்றம்சாட்டிக்கொண்டிருப்பது நடுத்தர வர்க்கத்திற்குத் தனது குற்றத்தை மறைக்க வேண்டுமானால் உதவலாம். அதுகூட வெகுநாளைக்கு நடக்காது.
இந்தப் பின்னணியில்தான் ஹஸாரேவின் போராட்டத்தை நாம் பார்க்க வேண்டும். இன்று இந்தியா எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய ஆழமான புரிதல் ஹஸாரேவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அவர் எடுத்திருக்கும் இந்த முயற்சி ஒரு நல்ல தொடக்கமாக அமைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவது மிக அவசியம். இந்த மசோதாவை எந்தளவிற்கு நீர்த்துப் போகச் செய்ய முடியுமென்பதில் பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், கபில் சிபல் போன்ற அரசியல் வாதிகள் குறியாய் இருப்பார்கள். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஏற்பட்டுவரும் அதே கதி இதற்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இன்றிருக்கும் நிலையில் எந்தவொரு அரசியல் கட்சியும் மிக வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவதை விரும்பாது. பரந்துபட்ட மக்கள் போராட்டங்கள் மட்டுமே வலுவான லோக்பால் சட்டத்தை உறுதிசெய்ய முடியும்.
நன்றி :: க.திருநாவுக்கரசு
Subscribe to:
Posts (Atom)












