Wednesday, November 30, 2011

வாருங்கள்.. புத்தகங்களால் உலகத்தை திறப்போம்..!!!




தோழர்களுக்கு வணக்கம்,
                      
                       மனித இனத்தின் மகத்தான கண்டுபிடிப்பு புத்தகம். 

             "ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள். 

             அதை திருப்பித்தருபவன் அதைவிட பெரிய முட்டாள்." - இது ஒரு அரேபிய பழமொழி 


             "விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் ?"

             என்று வினவியபோது, "பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது", என பதிலளித்தார் அறிஞர் அண்ணா


             "எங்கே தங்க விரும்புகிறீர்கள்?", என்று லண்டன் தோழர்கள் கேட்ட போது, "எது நூலகத்திற்கு அருகில் உள்ளது" எனக் கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர்


             தான் தூக்கில் இடப்படுவதர்க்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் தோழர் பகத்சிங் 


             இது போல் உலகின் சாதனையாளர்கள் , தலைவர்கள் என்று யாரை எடுத்து பார்த்தாலும் அவர்கள் புத்தக வாசிப்பாளர்களாக இருந்தது/இருப்பது

 புலப்படும். இத்தகைய சிறப்பு வாய்ந்த புத்தக வாசிப்பு குறைந்து வருவது ஏன்?? நேரடியாக இன்று புத்தகம் படிப்பவர்கள் எத்தனை பேர்? என்பதுதான் 

கேள்வி. 





                       புத்தக வாசிப்பு பற்றி கேட்டால் "I Hate Books" என்று சொல்வதை பலர் நவீனமாக நினைத்துக் கொண்டுள்ளனர்.. அதற்கு நமது சலிப்பூட்டும்

கல்விமுறை மிக முக்கிய காரணம்..  


                       சமீபத்தில் பார்த்த படம்பற்றி விவாதிக்க முடிகிறது. 'சச்சின் அந்த பாலை அப்படி ஆடியிருக்கக் கூடாது, நூறாவது சதத்தை அடித்திருக்க 

வேண்டும்' என்று விமர்சனம் செய்ய நேரம் இருக்கிறது. பெண்களைப் பற்றியோ, ஆண்களைப்பற்றியோ பேசுவதற்கு நாள் முழுக்க நேரம் இருக்கிறது. 

இப்படிப் பலவற்றை விவாதிக்கும் நாம், இதுவரை வாசித்த புத்தகங்கள் பற்றி எத்தனை பேரிடம் பேசி இருக்கிறோம்??.

               
                   இன்றைய தலைமுறைக்கு ஜெயகாந்தன் பற்றியோ, கல்கி பற்றியோ தெரியவில்லை. ஆனால் நேற்று வந்த நடிகையின் அ முதல் ஃ வரை

தெரிந்து வைத்திருப்பதை என்னவென்று சொல்வது?? இதற்கு நீங்கள் படித்துக் கொண்டு இருக்கும் இந்தக் கணினியும், வீட்டின் உள்ள தொலைக்காட்சியும்

முக்கிய காரணம். இன்னும் தினசரிநாளிதழ், வார இதழ் போன்றவை கூட முக்கிய காரணம். சினிமா குறித்து பக்கம் பக்கமாக வெளியிடும் இவர்கள் புத்தகம்

குறித்து பத்திகளில் முடித்து விடுகின்றனர்


                   என் கையில் ஒரு ஆனந்த விகடனோ, குமுதமோ இருந்தால் அதை வாங்கி சினிமா பற்றி படிக்கும் நண்பர்கள் அதில் உள்ள அரசியல்,

கட்டுரைகள், கவிதை இவற்றை மறந்தும் கூட கவனிப்பது இல்லை. இதற்கே இந்த நிலைமை என்றால் நான் கையில் ஒரு நாவலோ, இலக்கியமோ 

வைத்து இருந்தால் என்ன நடக்கும் என்பது என்பது உங்களுக்கே தெரியும்.


                     புத்தக வாசிப்பு குறைந்ததுக்கு நேரமில்லாதது ஒரு காரணமாய் சொல்லப்படுகிறது.  புதிதாய் பார்த்த படம் என்னவென்று கேட்டால் , நேற்று 

வெளியான புதுப் படப் பெயரை சொல்கிறார்கள், அதற்கு மட்டும் நேரம் எவ்வாறு கிடைக்கிறது என தெரியவில்லை.


                     குடும்பத்தில் யாருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் கிடையாத போது இன்றைய தலைமுறையிடம் மட்டும் எப்படி வாசிப்பு பழக்கத்தை 

எதிர்பார்க்க முடியும்? பாடப் புத்தகத்தை மட்டும் படித்தால் போதும் என நினைக்கும் பெற்றோர்கள் உள்ள வரை நம் சமூகம் மாறப் போவதில்லை.  

பாடப்புத்தகங்களை தாண்டிய ஒரு உலகம் உள்ளது. நாம் வாழும் வாழ்க்கையைத் தாண்டிய ஒரு வாழ்க்கை உள்ளது. அதனை அறிய நம் 

தலைமுறைக்கு புத்தகங்களை நேசிக்கக் கற்றுக் கொடுங்கள். மதிப்பெண்ணின் பின்னால் ஓடும் நாம் மனிதத்தின் பின்னால் ஓடப் புத்தகங்கள் தான் 

உறுதுணையாய் இருக்கும்.


                                       .
                     சிங்கப்பூரில் புத்தகம் படிக்கும் மாதம் என்ற ஒன்றை அறிவிக்கிறார்கள். ஆஸ்திரேலியா வில் மதிய உணவு இடைவேளைகளில் 'புத்தக 

வாசிப்பு நேரம்  என ஒன்றை அலுவலகங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் கடைப்பிடிக்கிறார்கள். அமெரிக்கா வில் வருடம் தோறும் 10 

சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து, அதை இலவசமாக மக்களிடம் கொடுக்கிறார்கள். 
                 

                    அமெரிக்காவையே புத்தகம் படிக்கும் நாடாக மாற்றும்வரை ஓயப்போவதில்லை என்று சபதம் எடுத்துச் செயல்படுகிறார் தொலைக்காட்சி
டாக்க்ஷோக்களின் முன்னோடியான ஓப்ரா வின்ஃப்ரே. இவை போன்றவற்றை நமது அரசிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது தான். இருக்கும் நூலகத்தை

காப்பாற்றவே, போராட வேண்டிய சூழல் தான் இன்று உள்ளது.


                    வாசிப்பின் மூலம் பல சாதனைகள் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. உலகில் நடந்த மாற்றங்களுக்கு புத்தகங்கள் தான் காரணம். புத்தக 

வாசிப்பால் உயர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் அவர்களது துறை சார்ந்த, அவர்களுக்குத் தேவையானவற்றை மட்டும் விழுந்து 

விழுந்து படிக்கிறார்கள். சமூக அக்கறை சார்ந்த வாசிப்பு என்பது இல்லை.


                    நம் தலைமுறை அடுத்த தலைமுறை அறிவார்ந்த சமூகமாய் வாழ புத்தகங்களை நேசிக்கக் கற்றுக் கொடுங்கள்.
                

                    கோவில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம் ஆனால் நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்ற ஒரு நிலை வர வேண்டும்.


            தனக்கு பிடித்த நடிகர், நடிகை, கிரிக்கெட் வீரர் பற்றி மட்டும் பேசுவதை விடுத்து தான் படித்த புத்தகம் பற்றி கூறலாம். 
              
                   
                       புத்தகங்கள் உங்கள் நண்பர்களாக இருக்கட்டும். 

                       புத்தகங்கள் உங்களின் வழிகாட்டியாக இருக்கட்டும். 
             
                       புத்தகங்கள் உங்கள் சிந்தனையைக் கிளறிவிட அனுமதியுங்கள். 

                       வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போல... ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு அழைத்துச் செல்லும். 
                  
                       அது இன்னொன்றுக்கு அழைத்துச் செல்லும். முடிவில்லா அந்த நதியில் மூழ்கி அனுபவங்களை சுவாசியுங்கள். இந்த உலகத்தை நேசியுங்கள்!!

No comments:

Post a Comment