Saturday, July 2, 2011

இன்றைய கல்வி ஏன் ஒழிய வேண்டும்???




இந்தியாவில் நவீனக் கல்வி மெக்காலேயின் வருகையில் இருந்து ஆரம்பிக்கிறது. அன்று, ஆங்கிலேயர்கள் நம்மை ஆளவும் அவர்களுக்கு உதவவும் ஆங்கிலம் தெரிந்த இந்தியர்கள் தேவைப்பட்டனர். அது வரை அநாகரிகத்தின் உச்சத்தில் உள்ள காலனி நாடுகளை நாகரிகப்படுத்தவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தினால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர் தான் மெக்காலே. தங்களது (கிருத்துவ) மதத்தினைப் பரப்பவும் கல்வியை பயன்படுத்தினர். சரி இவர்கள் கல்வி பெற்று சுயமாக சிந்திக்க ஆரம்பித்தால் நம்மையே இவர்கள் எதிர்ப்பார்கள் என்று தெரியாதா ஆங்கிலேயர்களுக்கு. அதனால் கல்வியினை வெறும் அறிவுத் திணிப்பாக மட்டுமே கொடுத்து வந்தனர். அடிமைகளாக இருப்பதே பெரும் பாக்கியம் என்றும் பரப்பி வந்தனர்.

ஆக ஆங்கிலேயர்களுக்கு குமாஸ்தாவாக இருக்க கொண்டுவந்த கல்வியை நாம் ஏன் இன்று வரை மாற்ற வில்லை??

அதனை மாற்ற வில்லை என்றாலும் பரவாயில்லை. அக்கல்வியை பயின்றவர்கள் தான் அறிவாளிகள், புத்திசாலிகள் என்று தவறான பிம்பத்தினையும் ஏற்படுத்தியுள்ளனர். இன்றைய மாணவர்களும் இக்கல்வியை பெற்று மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என்று கனவு கண்டுக் கொண்டுள்ளனர்.
அன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாய் இருக்க கொண்டுவந்த கல்வி முறை இன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் அடிமைகளை உருவாக்க உதவி வருகிறது.

வருடத்திற்கு பல லட்சம் பொறியாளர்களை உருவாக்கும் இந்தியாவில்,இன்று உலகமே உபயோகிக்கும் இந்தியன் கண்டுபிடித்த ஏதாவதொரு பொருளை குறிப்பிடுங்கள் பார்ப்போம். அப்படியே இருந்தாலும் அவை வெளிநாட்டு ஆராய்ச்சிக் கூடத்தில் கண்டுபிடிக்கப் பட்டதாகத் தான் இருக்கும். பல நூறு கோடிகள் கொட்டி உருவாக்கிய IIT,NIT போன்றவற்றால் இந்திய மக்களுக்கு என்ன பலன்? அவைகளில் படித்த எவனாவது நோபல் பரிசு வாங்கினானா? படித்து முடித்தவுடன் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பெற்று செல்வதினால் நமது சமூகத்திற்கு என்ன பயன்?
முதலில் ஒருவன் தனக்கு விருப்பமான துறையினை எடுத்துப் படித்தால் தான் அதில் ஆர்வமும், கற்றுக் கொள்ளும் மனோபாவமும் வளரும். ஆனால் இன்று தனக்கு விருப்பமான துறை எது? நமது திறமை என்ன? என்பதே பல மாணவர்களுக்கு தெரிவதில்லை. ஒரு மாணவனின் திறமையினை கண்டறிந்து வளர்க்க வேண்டிய கல்வி, அதனை முளையிலேயே கிள்ளி எறிவதாய் உள்ளது.
வெறும் மதிப்பெண் எடுப்பதிலேயே மாணவனின் கவனம் குவிக்கப்படுகிறது. என்நேரமும் படி, படி, விளையாட்டா கூடாது, இணையமா கூடாது, வெளியே செல்வதா கூடாது.
அதுவும் பொதுத் தேர்வுகளின் போது மாணவர்கள் படும் மன உளைச்சல் மிகக் கொடுமையானது.
வெறும் மதிப்பெண்கள் ஒருவனின் அறிவுத்திறனை எடுத்துரைக்குமா??




பத்தாவது மற்றும் பணிரெண்டாவதில் அதிக மதிப்பெண் எடுத்ததாலேயே அவன் உயர்ந்தவனாகிவிட்டானா? குறைவான மதிப்பெண் வாங்கியதாலே தாழ்ந்தவனாகிவிடுவானா? மேற்கொண்டு படிக்கப்போகும் இடத்தில் முதல் நாள் ஆசிரியர் கேட்பார்.”யார் எவ்வளவு மார்க் சொல்லுங்க?” மறுபடியும் ஆரம்பித்துவிடும் வேதனை.

பத்தாவதிலேயே அதிக மதிப்பெண் எடுத்த அனைவராலேயும் +2 ல் அதிக மதிப்பெண் எடுக்க முடிவதில்லை, +2-ல் அதிக மதிப்பெண் எடுத்த அனைருமே பட்டப்படிப்புகளில் / பட்டயப்படிப்புக்களில் அதிகம் சாதித்து விடுவதில்லை. அறிவிற்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. மனனம் செய்யும் திறமை தான் இதை தீர்மானிக்கிறது.

முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு அரிசி விலை கிலோ எவ்வளவென்றால் தெரிவதில்லை.கான்வெண்டில் கிழித்த மாணவனுக்கு கடைக்கு போய் மீன் வாங்கிவிட்டு வர தெரிவதில்லை. ஏன் அரிசி விலை ஏறியது, ஏன் விவசாயம் அழிந்து போனது என எதுவுமே தெரியாமல் / தெரியவைக்கப்படாமல் தான் அனைத்து மாணவர்களுமே வளர்க்கப்படுகிறார்கள். மக்களைப்பற்றி கவலைப்படாத சமூகம் அடிமைத்தனமான சமூகம் உருவாக்கப்படுகின்றது.

இதில் அதிக மார்க் எடுத்தவன் உயர்ந்தவன் குறைந்த மார்க் எடுத்தவன் தாழ்ந்தவன் என்பதுதான் வேடிக்கை. இந்தக் கல்விமூறையால் எதை மாற்ற முடியும் உன்னால்? ஏன் உன்னுடைய வாழ்வுக்கான செலவை உன் கல்விமூறையால் மாற்ற முடியுமா? அழிந்து போன விவசாயத்தை மாற்ற முடியுமா ? எதையுமே மாற்ற முடியாத இந்தப்படிப்பு முறை உயர்ந்ததா என்ன? இப்படி மனிதனின் வாழ்வுக்கு தம்புடி அளவுக்குக்கூட பயன் படாத இந்தப்படிப்பு முறையில் அதிக மதிப்பெண் எடுத்தால் என்ன?

குறைவான மதிப்பெண் எடுத்ததற்காக இக்கல்விமுறை மீது வராத கோபம் தனிப்பட்ட மாணவர் மீது வருகிறது. லட்சக்கணக்கானோரில் சிலர்தான் அதிக மதிப்பெண் எடுக்க முடிகிறதெனில் அது யாருடைய தவறு கல்வி முறை யின் மீதா? அல்லது அதை படித்த மாணவர்கள் மீதா ?

போராடும் இவ்வுலகில் போராடாமல் இருப்பதல்லவா தகுதிக்குறைவு?, மக்களைப்பற்றிய அக்கறையின்றி எதைப்பற்றி படிக்கிறாய்? உன் வாழ்வுக்கு, என் வாழ்வுக்கும் மக்களின் வாழ்வுக்கும் துளியும் பயன் படாத இப்படிப்பை தகுதியாய் நிர்ணயித்திருக்கும் இச்சமூகத்தை எதிர்க்காமலிருப்பதல்லவா தகுதிக்குறைவு.

அரசுப்பள்ளிகள் மூடப்படுகின்றன, தனியார் பள்ளிகள் நன்கொடை போதவில்லை என்று பள்ளிகளை இழுத்து மூடுகின்றன.அரசுக்கல்லூரிகள் புதைகுழிக்கு தயராயிருக்கின்றன, பொறியியலெனில் லட்சங்கள், மருத்துவத்திற்கோ கோடிகள் எங்கும் பணம் தான் எதிலும் பணம்தான். பத்தாவதிலும் பனிரெண்டாவதிலும் முதல் பாடம் எடுத்தவன் தானா இன்று கல்விக்கட்டணங்களை குறைக்கக்கோரும் களத்தில் நிற்கிறான்?அது நிர்ணயிப்பதல்ல, சமுகத்தின் மீதான அக்கறை தான் போராடத் துண்டுகிறது

படிக்கும் மாணவனுக்கு எதற்கு அரசியல்? படிக்கும் மாணவனுக்கு அல்லாமல் வேறு யாருக்கு? உன் தாயின் தாலி கல்லூரி தாளாளரின் பற்களில் மின்னும் வேளையில் உன்னையன்றி யார் போராடுவார்கள்? இன்ஸ்டால்மெண்ட் கட்டணத்தை கட்ட முடியாமல் நீ வேதனையுறுவதை, வெளியில் நிற்க வைத்து அவமானப்படுவதை உன்னையன்றி யார் அறிவார்? உனக்கு உன்னைத்தவிர யார் போராட முடியும்?

பணமின்றி படிப்பதற்கு படிப்பொன்று இருக்கிறது. ஆம் மக்களைப்படி, அவர்களிடமிருந்து கல், அவர்களுக்கே கற்றுக்கொடு, அதற்காக உன்னை படிக்க வேண்டாமென்று சொல்லவில்லை. இந்த விளங்காத படிப்பை விளங்க வைக்க மக்களையும் சேர்த்துப்படி. மதிப்பெண் குறைவென்றும் தேர்வில்தோல்வியுற்றனென்றும் உன்னை கிண்டலடித்தவர்களை எதிர்த்து , போராத அடிமைகளே என்று நீ எள்ளி நகையாடு. இனி நீ தான் ஆசிரியன் 


வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக தான் நமது குழந்தைகளை மாற்றி வருகிறோம்... பணம் பண்ணும் கருவியாக கல்வியை பார்க்காமல் மனிதத்தை சமூகத்தை அறிவியலை வாழ்வியலை அறியும் ஆயுதமாய் கல்வி மாற வேண்டும்

1 comment:

  1. அரசியல் பேசும் மாணவர்களிடையே கட்சியின் தவறான கொள்கைகள் ஊட்டப்பட்டு விடுகின்றன..அவனும் அப்படியே வளர்கிறான்...நாளடைவில் அவனும் இன்றைய அரசியல்வாதிகளாய் உருமாறுகிறான்..

    ReplyDelete